கூடுதல் போனஸ் ; பனியன் தொழில் சங்கத்தினர் வலியுறுத்தல்
திருப்பூர்; கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ், பண்டிகைக்கு, 20 நாள் முன்னதாகவே வழங்க வேண்டுமென, பனியன் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. திருப்பூர் நகரை பொறுத்தவரை, 'நிட்டிங்' துவங்கி 'பேக்கிங்' வரையிலான, ஒட்டுமொத்த பனியன் தொழிலாளருக்கும், தீபாவளி போனஸ் எதிர்பார்ப்பு, பெரிய ஆர்வத்தை துாண்டும். ஆண்டுக்கு ஒருமுறை கைநிறைய போனஸ் வாங்கும் போது, தொழிலாளர் குடும்பங்களின் நீண்டநாள் கனவுகள் நிறைவேறுகிறது. தற்போது ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், இந்தாண்டு போனஸ் தொகையை ஒவ்வொரு தொழிலாளியும் எதிர்பார்த்துள்ளனர். டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, மொபைல் போன், டூவீலர் வாங்குவது அதிகரிக்கும். இதேபோல், பெண் தொழிலாளர்களின் தங்க நகை வாங்கும் கனவும் கைகூடுகிறது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை, அக்., 20ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், தொழிலாளர்களிடையே போனஸ் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக, பனியன் தொழில் சங்கத்தினரும், போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி குரல்கொடுக்க துவங்கிவிட்டன. ஏற்றுமதி நிறுவனங்கள், ஆர்டரை உரிய காலத்தில் அனுப்ப வேண்டும் என்பதால், பண்டிகைக்கு முந்தைய நாள் வரை உற்பத்தி பணிகளை தொடர்வர். தொழிலாளர், சொந்த ஊர் சென்றுவிடுவார்கள் என்பதால், கடைசி நாளில் போனஸ் கொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. கடைசி நேரத்தில் போனஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும், பண்டிகைக்கு, 20 நாட்கள் முன்னதாகவே போனஸ் பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்பதே, தொழில் சங்கங்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து பனியன் தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: பனியன் தொழிலாளர் உட்பட, அனைத்து தொழிலாளர்களுக்கும், பண்டிகைக்கு, 20 நாட்களுக்கு முன்னதாக, போனஸ் வழங்க வேண்டும். கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்; அதில், எவ்வித சமாதானமும் செய்யக்கூடாது. பனியன் தொழிலாளர்களில், 'பீஸ்ரேட்' எனப்படும் தொழிலாளர்களுக்கும், சட்டப்படி போனஸ் வழங்க வேண்டும்; பெரும்பாலான நிறுவனங்கள் வழங்குவதில்லை. 'பீஸ்ரேட்' தொழிலாளர்களுக்கும் கட்டாயம் போனஸ் வழங்குவதை, தொழிலாளர் துறை அலுவலர்கள் கண்காணித்து முறைப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.