உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., மூன்றாம் மண்டலத்தில் தேவை கூடுதல் தண்ணீர்! நிலைப்பயிர்களை காப்பாற்ற கோரிக்கை

பி.ஏ.பி., மூன்றாம் மண்டலத்தில் தேவை கூடுதல் தண்ணீர்! நிலைப்பயிர்களை காப்பாற்ற கோரிக்கை

உடுமலை; பாசனப்பகுதியில், வறட்சி நிலவுவதால், நிலைப்பயிர்களை காப்பாற்ற, மூன்றாம் மண்டலம் இரண்டாம் சுற்றில், கூடுதல் நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் என பி.ஏ.பி., விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பி.ஏ.பி., மூன்றாம் மண்டலத்தில் கோவை மாவட்டத்தில், 22 ஆயிரத்து 801 ஏக்கரும், திருப்பூர் மாவட்டத்தில், 71 ஆயிரத்து 561 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் வழியாக, ஜன., 29ல், தண்ணீர் திறக்கப்பட்டது.பிரதான கால்வாயிலிருந்து சுற்றுகள் அடிப்படையில், கிளை வாய்க்காலில், திறக்கப்பட்ட தண்ணீரை அடிப்படையாகக்கொண்டு, விவசாயிகள் நிலக்கடலை, மக்காச்சோளம், எள் மற்றும் பீட்ரூட் உட்பட காய்கறி பயிர்களை பயிரிட்டனர்.இந்நிலையில், முதல் சுற்று நிறைவு பெற்ற பிறகு, அணை நீர்மட்டம் சரிவு, சர்க்கார்பதி நீர் மின் உற்பத்தி நிலையத்தில் பழுது உள்ளிட்ட காரணங்களால், இரண்டாம் சுற்று தண்ணீர் திறப்பு தாமதமானது. இழுபறிக்கு பிறகு இரண்டாம் சுற்றுக்கு, இம்மாதம் 13ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இந்நிலையில், முன்னதாகவே துவங்கிய கோடை வெப்பம் காரணமாக, பாசனப்பகுதிகளில், வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வளர்ச்சி தருணத்திலுள்ள, பலவகை செடிகளிலும் வாட்டம் அதிகரித்து, தண்ணீர் தேவை கூடுதலாகியுள்ளது. எனவே, பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில், ஒவ்வொரு சுற்றிலும் கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனம் துவங்கியதில் இருந்து ஆயக்கட்டு பகுதியில் மழை பெய்யவில்லை. எனவே, விளைநிலங்களில், மண் வெடித்து, தண்ணீரை அதிகளவு உறிஞ்சுகிறது.எனவே இரண்டாம் சுற்றில் அனைத்து கிளை கால்வாய்களிலும், கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் நிலைப்பயிர்கள் கருகும் நிலை ஏற்படும்.இதே போல், மண்டல பாசனத்தில், நான்கு சுற்று மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டால், 110 நாட்கள் வயதுடைய மக்காச்சோளம் போன்ற பயிர்களில், கதிர் பிடிக்கும் திறன் பாதிக்கப்படும். நிலக்கடலை செடிகளில், காய்கள் ஊட்டமிழக்கும். மூன்று மாதங்கள், சாகுபடிக்காக பல்வேறு செலவினங்களை மேற்கொண்டாலும், நான்கு சுற்றுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டால், சாகுபடியில், நஷ்டம் ஏற்படும்.எனவே, மண்டல பாசனத்தில், கூடுதலாக ஒரு சுற்று தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அரசுக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்', என்றனர்.

கண்காணிப்பு அவசியம்

மழை இல்லாத போது, பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பிரதான மற்றும் கிளை கால்வாய்களில் தண்ணீர் திருட்டு துவங்கியுள்ளது. இரவு நேரங்களில், குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடுவதால், பாசன பகுதிகளில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே கூட்டு ரோந்து குழு அமைத்து தண்ணீர் திருட்டை தடுக்க, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை