அ.தி.மு.க., வெற்றிக்காக ஆதரவு திரட்ட வேண்டும்
திருப்பூர்; தி.மு.க., அரசின் வரி உயர்வுகளை எடுத்துக்கூறி, இப்போதிருந்தே அ.தி.மு.க.,வெற்றிக்காக ஆதரவு திரட்ட வேண்டுமென, 'பூத்' கமிட்டி கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் உள்ள, மூன்று சட்டசபை தொகுதி களிலும், அ.தி.மு.க., சார்பில், 'பூத்' கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, வார்டு கிளைக்கு நிகரமாக, ஒன்பது பேர் கொண்ட நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டம் வாரியாக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு, வார்டு மற்றும் மாநகராட்சி பகுதி அளவில், ஒவ்வொரு பூத் வாரியாக சென்று, நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனை நடந்து வருகிறது. அதன்படி, திருப்பூர் மாநகராட்சியின், தென்னம்பாளையம் பகுதிக்கு உட்பட்ட, 42 வது வார்டில் உள்ள, 17 'பூத்'களுக்கும், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், புதிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், செங்குந்தபுரம் ராஜகணபதி மண்டபத்தில் நடந்தது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர், பொள்ளாச்சி ஜெயராமன், புதிய 'பூத்' கமிட்டி நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ''சட்டபை தேர்தல் வர இருப்பதால், பலமான கூட்டணி அமைக்கும் விவகாரத்தை கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும்.ஒவ்வொரு பூத் வாரியாக, நமது ஆதரவு ஓட்டுக்களை திரட்ட, இப்போதிருந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., அரசின் வரி உயர்வுகளை எடுத்துக்கூறி, வீடு வீடாக சென்று பேசி, அ.தி.மு.க., வெற்றிக்காக ஆதரவு திரட்ட வேண்டும்,'' என்றார்.