இணைப்பு வழங்கியும் குழாயில் காற்று
திருப்பூர் : குடிநீர் இணைப்பு வழங்கியும், சப்ளை செய்யப்படாமல் இருப்பதால், தண்ணீரை, 500 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருவதாக, இடுவாய் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது இடுவாய் ஊராட்சி சின்னக்காளிபாளையம். அங்குள்ள செந்தில்நகர் பகுதியில், 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. அப்பகுதி மக்களுக்கு, நீண்ட நாட்களாக குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் இருந்தது.தெருக்குழாய் மூலமாக, அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடந்து வந்தது. கூட்டுக்குடிநீர் திட்டம் வந்த பிறகு, புதிய குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.குடிநீர் இணைப்பு கொடுத்ததும், தெருக்குழாய்கள் மூடப்பட்டன. இருப்பினும், வீட்டு இணைப்பில் குடிநீர் வழங்காமல், ஊராட்சி நிர்வாகம் இழுத்தடித்து வருவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நேற்று கலெக்டர் அலுவலகத்தில் இதுதொடர்பாக முறையிட்டனர்.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'ஊராட்சி பணியாளர்கள் எங்கள் பகுதிக்கு வந்து குப்பை வாங்குவதே இல்லை. நீண்ட தொலைவு சென்று, குப்பை கொட்ட வேண்டியுள்ளது. குடிநீர் இணைப்பு வழங்கியும், வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில்லை. இதன்காரணமாக, 2 ஆயிரம் லிட்டர் தண்ணீரை, 500 ரூபாய்க்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். விரைவில், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,' என்றனர்.