வலுவிழந்த பிரதான கால்வாயை புதுப்பிக்க நிதி போதாது! அமராவதி ஆயக்கட்டு விவசாயிகள் அதிருப்தி
உடுமலை : அமராவதி பிரதான கால்வாயை புதுப்பிக்க குறைந்த நிதி ஒதுக்கியதால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இதில், புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்களுக்கு, அணையிலிருந்து, 64 கி.மீ., நீளம் அமைந்துள்ள பிரதான கால்வாய் வாயிலாக நீர் வழங்கப்படுகிறது.இக்கால்வாய் அமைத்து, 60 ஆண்டுக்கு மேல் பழமையானதாகவும், பல ஆண்டுகளாக பராமரிக்காததால், கான்கிரீட் சிலாப்கள் கொண்டு அமைக்கப்பட்ட கால்வாய் கரைகள் உடைந்தும், மதகுகள் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன.மேலும், கால்வாயின் இரு புறமும் அமைந்துள்ள, ஓடைகள் வழியாக வரும் நீர் கால்வாயில் கலந்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், கால்வாயின் கீழ் நுாற்றுக்கும் மேற்பட்ட இடங்களில், அமைந்துள்ள குகை நீர் வழித்தடங்கள் சிதிலமடைந்துள்ளது.இதில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, நீர் விரையம், பாசனத்திற்கு நீர் வினியோக சிக்கல் என பெரும்பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும், என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதற்காக, மூன்று ஆண்டுக்கு முன், 25 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பிய நிலையில், நிதி ஒதுக்கவில்லை. தொடர்ந்து, குகை நீர் வழித்தடங்கள், பழமையான மதகுகள் மற்றும் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில், கடந்தாண்டு, பிரதான கால்வாயில், கி.மீ., 7.500 முதல், 16.500 வரை, 9 கி.மீ., நீளத்திற்கு, 4.92 கோடி ரூபாய் செலவில், இரண்டு மேல்மட்ட நீர்வழிப்பாதை, 10 சிறிய அளவிலான சுரங்க நீர் வழிப்பாதை (அண்டர் டனல்), 20 மதகுகள் புதுப்பிக்கப்பட்டு, கரைகளில், கம்பி கட்டி கான்கிரீட் அமைக்கப்பட்டது.மேலும், சிதிலமடைந்து காணப்பட்ட ஒரு சில பகுதிகளில், கான்கிரீட் சிலாப்புகள் மாற்றப்பட்டன.நடப்பாண்டு முழுமையான நிதி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பிரதான கால்வாய் சரகம், மைல் 16.5 முதல், 28.7 வரை, 19 கி.மீ., துாரம் அமைந்துள்ள, குறுக்கு கட்டுமானங்கள் புதுப்பிக்க, ரூ. 5.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதியில், பிரதான கால்வாய் கீழ் பகுதியில் அமைந்துள்ள, 9 குகை வழி நீர்ப்பாதைகளும், 10 மதகுகள் மற்றும் 2 கி.மீ., நீளத்திற்கு கரைகள் பலப்படுத்தப்பட உள்ளது. வீணாகும் பாசனநீர்
அமராவதி அணை துவங்கி, தாராபுரம் வரை, கான்கிரீட் கால்வாய் கரை முழுவதும் சிதிலமடைந்தும், குகை நீர் வழிப்பாதைகள் உடைந்தும், மதகுகள் பழுதடைந்தும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரில் பெருமளவு வீணாகிறது.மேலும், பாசன காலங்களில் ஏற்படும் உடைப்பு காரணமாக, பயிர்களுக்கு உரிய நேரத்தில் நீர் கிடைக்காமல் காய்ந்து வரும் நிலையும் நீடிக்கிறது. எனவே, முழுமையாக அமராவதி பிரதான கால்வாயை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.