உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி அணையில் தற்போதுள்ள நீர் இருப்பு...கோடையை சமாளிக்குமா?பாசனம், குடிநீர் தேவைக்கு பற்றாக்குறையாகும்

அமராவதி அணையில் தற்போதுள்ள நீர் இருப்பு...கோடையை சமாளிக்குமா?பாசனம், குடிநீர் தேவைக்கு பற்றாக்குறையாகும்

உடுமலை;உடுமலை அமராவதி அணையிலிருந்து, பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்துள்ளது. இதனால், பாசனம் மற்றும் கோடையை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு ஜூன் மாதமும், புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, ஆக., மாதமும் நீர் திறக்கப்படும்.கடந்தாண்டு, தென் மேற்கு பருவ மழை ஏமாற்றியதால், அணைக்கு நீர்வரத்து குறைந்தது. பாசன நிலங்களுக்கு, நீர் இருப்பை பொருத்து உயிர்த்தண்ணீர் வழங்கப்பட்டது.இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை காலத்தில், இறுதியில் பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஜன., 9ம் தேதி அணை நிரம்பி, மூன்று வாரம், அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், கடந்த ஜன., 25 முதல், வரும் மார்ச் 15 வரை, 50 நாட்கள் பாசனத்திற்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டது. விவசாயிகள் கோரிக்கை மற்றும் பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களினால், நீர் வழங்குவது தாமதமானது.தற்போது, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு, அரசு உத்தரவு அடிப்படையில் நீர் வழங்கப்பட்டு, கடந்த, 25ம் தேதி நிறைவு செய்யப்பட்டது. பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு ஆற்றில் திறக்கப்படும் நீர், வரும், 31ல் நிறைவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், நடப்பாண்டு பாசனம் இம்மாதம், 31ல் நிறைவு செய்யப்படுகிறது.பழைய ஆயக்கட்டு பாசனப்பகுதிகளில், நிலைப்பயிராக உள்ள நெற் பயிர்களுக்கு, கூடுதல் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.புதிய ஆயக்கட்டு விவசாயிகளும், நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு நீர் தேவை உள்ளதால், கூடுதல் நாட்கள் நீர் வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர். பாசனம் மற்றும் ஆற்றின் வழியோர கிராமங்களின் குடிநீர் பயன்பாட்டிற்கும் அணையை நம்பியுள்ள நிலையில், அணை நீர்இருப்பு சரிவு காரணமாக, சிக்கல் ஏற்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது:அமராவதி பழைய ஆயக்கட்டு, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, ராமகுளம் முதல், கரூர் வலது கரை பாசன கால்வாய் வரை, 18 வாய்க்கால்களின் கீழ் பாசன வசதி பெறும், 29 ஆயிரத்து, 387 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி ஆற்று மதகு வழியாக 2,229.12 மில்லியன் கன அடி நீர் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நீர் வழங்கப்பட்டு, வரும், 31ல் நிறைவு செய்யப்படுகிறது.அதே போல், திருப்பூர் மாவட்டத்திலுள்ள, புதிய ஆயக்கட்டு பாசனத்தில், 25,250 ஏக்கர் நிலங்களுக்கு, அமராவதி பிரதான கால்வாய் வழியாக,1,064.45 மில்லியன் கன அடி நீர் வழங்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நீர் வழங்கப்பட்டு, கடந்த, 25ல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.தற்போது அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், மழை பெய்தால் மட்டுமே, ஆற்றில் நீர் வழங்கப்படும். பிரதான கால்வாயில், பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ளது. இரு மாதங்களில் முடிக்க திட்டமிட்டு, பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

அணை நிலவரம்

அமராவதி அணையில் நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 48.26 அடி நீர்மட்டம் இருந்தது. நீர்இருப்பு, மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 1,090.58 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 16 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, வினாடிக்கு, 550 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை