மூணாறு ரோட்டை கடக்கும் விலங்குகள்; இடையூறுகளை தடுப்பது அவசியம்
உடுமலை; ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு இடையில், உடுமலையிலிருந்து சின்னாறு, மறையூர் வழியாக மூணாறு செல்லும் ரோடு உள்ளது.இந்த ரோட்டில், புங்கன் ஓடை, காமனுாத்து, 'எஸ்' வளைவு உட்பட பல்வேறு இடங்களில், யானை உட்பட வனவிலங்குகள் ரோட்டை கடந்து அமராவதி அணைக்கு செல்கின்றன.காலை மற்றும் மாலை நேரங்களில், ரோட்டை கடந்து செல்லும் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றுலா பயணியர் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளை போட்டோ எடுத்தல், அவற்றின் மீது குச்சிகளை வீசுதல் போன்ற நடவடிக்கைகளை சிலர் மேற்கொள்வதால், யானைகள், வாகனங்களை துரத்தி, மனிதர்களை தாக்க முயல்கின்றன. மாலை நேரங்களில், குடிநீர் தேவைக்காக இடம் பெயரும் யானைகள் தங்களின் இயல்பான வழித்தடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பாதிப்பிற்குள்ளாகின்றன. இப்பிரச்னையால், மூணாறு ரோட்டில் செல்லும் வாகனங்களை யானைகள் துரத்துவது தொடர்கதையாகியுள்ளது.கோடை சுற்றுலா சீசன் துவங்கியுள்ள நிலையில், மூணாறு ரோட்டில் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிப்பதால், அதிகரித்துள்ள சுற்றுலா வாகனங்களால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.விதிகளை மீறி, வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது, வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.