ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடி உயரும்... ஏ.இ.பி.சி., துணை தலைவர் நம்பிக்கை
திருப்பூர் : ''திருப்பூரின், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 40 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கை அடையும்,'' என, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்தார்.மத்திய ஜவுளித்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் அடிப்படையில், மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம், நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த பிப்., மாதம், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 13,201 கோடி ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் நடந்துள்ளது. அதேபோல், நடப்பு நிதியண்டின், ஏப்., முதல் பிப்., வரையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதியும், 1,22,160 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:முந்தைய ஆண்டுகளை காட்டிலும், ஆயத்த ஆடை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாதம், 28 நாட்களை கொண்டதால், ஏற்றுமதி வளர்ச்சி குறைவாக இருப்பது போல் தெரிகிறது. 31 நாள் என்றால், இன்னும் அதிகமாக இருக்கும். ஆயத்த ஆடை ஏற்றுமதி, குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக அளவிலான சந்தைகளில் விரிவடைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக, வலுவான வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.சர்வதேச சந்தை வாய்ப்புகள் அதிகரிக்கும் போதும், புதிய தொழில் கண்டுபிடிப்புகளாலும், வரும் மாதங்களில், ஆயத்த ஆடை வர்த்தகம் நீடித்த நிலையான வளர்ச்சியை அடையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும், திருப்பூரின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், இந்தாண்டு, 15 சதவீதம் அதிகரிக்கும்; நீண்ட நாள் எதிர்பார்த்தபடி, 40 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி இலக்கை சென்றடையும்.இவ்வாறு, அவர் கூறினார்.