அத்திக்கடவு - அவிநாசி திட்ட தண்ணீர் வீண்; குழாய்களில் உடைப்பு; விவசாயிகள் குற்றச்சாட்டு
திருப்பூர்:''அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது. இதுகுறித்து புகார் தெரிவிக்க உரிய அலுவலர்கள் தொடர்பு எண் குறித்து அறிவிப்பு வைக்க வேண்டும்'' என்று, விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:கொப்பரை விலைசரியாமல் தடுக்க வழி* மனோகரன், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:'நாபெட்' நிறுவனம் கொள்முதல் செய்துள்ள கொப்பரையை ஒரே நேரத்தில் விற்பனை செய்யாமல் இருப்பு வைத்து படிப்படியாக விற்பனை செய்ய வேண்டும். இதனால், விலை சரிவைத் தடுக்க முடியும். மாவட்டம் முழுவதும் கொப்பரை கொள்முதல் மையம் மற்றும் ஒழுங்குமுறை கூடத்தில் இதன் ஏலம் நடத்த வேண்டும். உடுமலை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆண்டுக்கணக்கில் மனுக்கள் தேங்கிக் கிடக்கிறது. மனு மீது நடவடிக்கை கோரி, ஐகோர்ட்டை நாட வேண்டிய நிலை உள்ளது.நுாண்ணுாட்ட உரம்மானியத்தில் கிடைக்குமா?* மலரவன், தமிழ் மாநில விவசாயிகள் சங்கம்:'தாட்கோ' திட்டத்தில் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். தோட்டக்கலை துறை சார்பில் நுண்ணுாட்ட உரம் மானிய விலையில் வழங்க வேண்டும். உட்பிரிவு ரத்து போன்ற மனுக்கள் நில அளவைப் பிரிவில் நீண்ட காலம் கிடப்பில் உள்ளது.'வாகனம் தருவார்களாம்...விவசாயிகள் டீசல் தரணுமாம்'* ஈஸ்வரமூர்த்தி, உழவர் உழைப்பாளர் கட்சி:அலங்கியம், தளவாய்ப்பட்டினம் உட்பட்ட பகுதியில், 8,500 ஏக்கர் பாசனம் பெறும் வாய்க்கால் மோசமாக உள்ளது. வாய்க்காலில் நீர் திறப்புக்கு முன் சீரமைக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். உரிய காலத்தில் நிதி கேட்டுப் பெறாமல் தற்போது மாவட்ட நிர்வாகம் வாயிலாக நிதி பெற்றுள்ளனர். துார்வாரும் பணிக்கு வாகனம் தருவதாகவும், டீசலை விவசாயிகள் தர வேண்டும் என்கின்றனர்.ஊரக வேலை உறுதி திட்டத்தில் வாய்க்கால் சீரமைப்பு பணி 2.5 கோடி ரூபாயில் நடக்கிறது. இதில் காங்கயத்தில் நான்கு ஊராட்சிகள் விடுபட்டுள்ளன. அடுத்தடுத்த ஊராட்சிகள் விடுபட்டால் இதில் எப்படி பணி செய்வது?மாட்டுக்கொட்டகைஅமைப்பதில் ஊழல்?* மதுசூதனன், மாவட்டக்குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:காய்கறி விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். விதைகள் வழங்குவதில் தாமதம் நிலவுகிறது. கனிம வளம் பல இடங்களில் கடத்தல் நடக்கிறது. குளம், குட்டைகளில் வண்டல் மண்ணுடன் கிராவல் மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கு எடுக்க அனுமதிக்க வேண்டும். மாட்டுக் கொட்டகை அமைப்பதில் ஒப்பந்த நிறுவனம் தரமற்ற வகையில் அமைக்கிறது. இதில் பெரும் ஊழல் நடந்துள்ளது.(இவ்வாறு அவர் பேசிய போது அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். 'இது குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது; விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். இது கூட தெரியாமல் அதிகாரிகள் என்ன செய்கிறீர்கள்' என அவர் திருப்பி கேட்டார்)'அரசு என்றால்அதிகாரிகள்தானே'* கிருஷ்ணசாமி, ஒருங்கிணைப்பாளர், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம்:கடந்தாண்டு நடந்த 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் அளித்த மனு குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. நேரில் சென்று கேட்டால், உரிய பதில் இல்லை. எங்களிடம் கேட்கக்கூடாது என்கின்றனர். அரசிடம் போய் கேளுங்கள் என்கின்றனர். அரசு என்றால் அதிகாரிகள் தானே; இல்லை வேறு யாரேனும் உள்ளனரா? அதிகாரிகள் பொறுப்பான முறையில் பொதுமக்களிடம் நடந்து கொள்ள வேண்டும். கலெக்டர் உரிய அறிவுரை வழங்க வேண்டும்.குழாய்கள் உடைப்புதண்ணீர் வீண்* குமார், மாவட்ட செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பல இடங்களில் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகிறது. இது குறித்து புகார் தெரிவிக்க உரிய அலுவலர்கள் தொடர்பு எண் குறித்து அறிவிப்பு வைக்க வேண்டும். மொரட்டுப்பாளையம் வாரச்சந்தை ஆக்கிரமிப்பால் குறுகி வருகிறது. சுற்றுச் சுவர் கட்ட வேண்டும்.இவ்வாறு விவசாயிகள் பேசினர்.---கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.'மனு மீது என்ன நடவடிக்கை?' எனக் கேட்டால், 'அரசிடம் போய் கேளுங்கள்' என்கின்றனர். அரசு என்றால் அதிகாரிகள் தானே; இல்லை வேறு யாரேனும் உள்ளனரா?
தண்ணீர் இல்லை என்றால் எங்கே செல்வது?
காளிமுத்து, தலைவர், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்:உப்பாறு அணைக்கு நீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை ஏற்கப்படாமல் உள்ளது. பி.ஏ.பி., திட்டப் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. கடலில் சென்று வீணாகும் நீரைக் கொண்டு சேர்ப்பதில் என்ன சிக்கல்? குடிநீருக்கும், கால்நடைகளுக்கும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலையில் விவசாயிகள் உள்ளனர்.காவிரி நதி நீர் பங்கீடு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு என ஏதோ காரணங்களை சொல்கின்றனர். தண்ணீர் இல்லை என்றால் தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்துக்குத் தான் செல்ல வேண்டுமா? சூரியநல்லுாரில் விவசாய நிலத்தில் மருத்துவ கழிவு எரிக்கும் தொழிற்சாலை அமைக்கின்றனர். இது குறித்து எதிர்ப்பு தெரிவித்த வழக்கு கோர்ட்டில் உள்ளது. ஆனால், நிர்வாகம் எதிர்ப்பு தெரிவிப்போரை மிரட்டி வருகிறது. உப்பாறு ஆலம்பாளையத்தில் தடுப்பணை கேட்டு, 10 ஆண்டுகளாக கோரிக்கை அப்படியே உள்ளது.
அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம்
வேலுசாமி, தலைவர், காங்கயம் - வெள்ளகோவில் பாசன பாதுகாப்பு குழு: நாய் கடித்து கால்நடைகள் உயிரிழந்தால், இழப்பீடு இல்லை. வாய்க்காலில் கழிவுகள் வீசுவதை தடுக்க கம்பிவேலி அமைக்கும் திட்டம் சில பகுதிகளில் கிடப்பில் போட்டுக் கிடக்கிறது. கடந்த கூட்டத்தில் வலியுறுத்தியும் இதுவரை எந்த பதிலும் இல்லை.வாய்க்காலில் தண்ணீர் திருட்டு என்று கூறுகின்றனர். அதை விட பாதிப்பு கூடுதல் தண்ணீர் திறப்பால் நடக்கிறது. சில பகுதிகளில் அதிகளவில் தண்ணீர் திறப்பதால் கடைமடைக்கு செல்வதில்லை. பி.ஏ.பி., திட்டத்தில், 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், எங்கு என்ன பணி என்று கூட தெரிவிக்காமல் எதற்கு கூட்டம் நடத்தி, என்ன கருத்து கேட்டு பதிவு செய்யப் போகின்றனர்? பாசன விவசாயிகளுக்கு, சங்கங்களுக்கு கூட தெரிவிக்காமல் என்ன திட்டத்தை மேற்கொண்டு என்ன பயன்?(இவ்வாறு அவர் பேசிய போது அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் எழுந்தது)