தாறுமாறாக ஓடிய கார் வாலிபர்களுக்கு கவனிப்பு
அனுப்பர்பாளையம் : கோவையில் உள்ள ஒரு கல்லுாரியில் பயின்று வரும் மாணவர்கள் மூன்றுபேர் நேற்று மாலை கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்றனர். காரை தாறுமாறாக ஓட்டி, அம்மாபாளையத்தில், இருவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றனர்.இதனை பார்த்து ஆவேசமடைந்த பொதுமக்கள் காரை விரட்டி சென்றனர். அதில், காந்தி நகர் பகுதியில், மற்றொரு கார் மீது மோதி நின்றது. விரட்டி வந்தவர்கள், காரில் இருந்தவர்களை நன்றாக 'கவனித்து' அனுப்பர்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், திருப்பூர் வளையங்காட்டை சேர்ந்த சீனிவாசன், 21, கோத்தகிரியை சேர்ந்த ஜெயசூர்யா, 22, ஸ்ரீநிவாசா தியேட்டர் பகுதியை சேர்ந்த ஜெயவர்தன், 20, என தெரிய வந்தது. மூவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.