உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்தி அணையில் ஒரு மாதமாக சீரான நீர்இருப்பு! பாசனத்திற்கு திறந்தும் குறையவில்லை

திருமூர்த்தி அணையில் ஒரு மாதமாக சீரான நீர்இருப்பு! பாசனத்திற்கு திறந்தும் குறையவில்லை

உடுமலை : திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்தும், பாசனத்திற்கு நீர்திறப்பும் ஒரே நிலையில் காணப்படுவதால், ஒரு மாதமாக அணை நீர்மட்டம், 50 அடியில் நீடிக்கிறது. இதனால், இரண்டாம் மண்டல பாசனம், இரண்டாம் சுற்றுக்கு இடைவெளியின்றி நீர் வழங்கப்படுகிறது.பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. தற்போது, இரண்டாம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த, ஆக.,18 முதல் நீர் வழங்கப்படுகிறது.வரும், டிச., 16 வரை, 120 நாட்களுக்கு, உரிய இடைவெளி விட்டு, 4 சுற்றுக்களில், 8 ஆயிரம் மில்லியன் கனஅடி நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதே போல், பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனம், தளி கால்வாய் ஏழு குளம் பாசனத்திலுள்ள, 2,786 ஏக்கர் நிலங்களுக்கும் நீர் வழங்கப்பட்டு வருகிறது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க, கடந்த, ஆக., 4ம் தேதி முதல், காண்டூர் கால்வாய் வழியாக, திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து நீர் கொண்டு வந்து, திருமூர்த்தி அணையில் சேகரித்து, பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது.வழக்கமாக, மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் போது, அணை நீர்மட்டம் குறைவதால், 21 முதல், 25 நாட்கள் நீர் வழங்கப்பட்டு, ஒரு சுற்று நிறைவு செய்யப்படும்.தற்போது, காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணி முழுமையடைந்துள்ளதால், நீர் இழப்பு குறைந்துள்ளது. அதே போல், பருவ மழையால் திட்ட தொகுப்பு அணைகளும் நிரம்பியுள்ளதால், திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்தும், பாசனத்திற்கு நீர் திறப்பும், ஒரே சீராக உள்ளது. இதனால், கடந்த, ஒரு மாதமாக, 50 அடிக்கு மேல் நீர்மட்டம் காணப்படுகிறது. இதனால், முதல் சுற்றுக்கு இடைவெளியின்றி, இரண்டாம் சுற்றுக்கும் நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது: காண்டூர் கால்வாய் பராமரிப்புக்கு முன், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து திறக்கப்படும் நீரில், வினாடிக்கு, 150 கன அடி வரை இழப்பு காணப்பட்டது.தற்போது முழுமையாக கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டதால், நீர் ஆவியாதல் உள்ளிட்ட காரணங்களினால், 40 கன அடி மட்டுமே இழப்பு ஏற்படுகிறது. திட்ட தொகுப்பு அணைகளில் எடுக்கும் நீர், முழுமையாக வந்து சேருகிறது.அதே போல், திருமூர்த்தி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், மழை பெய்து, பாலாறு, நல்லாறுகள் வழியாகவும் ஓரளவு நீர் வரத்து காணப்படுகிறது.பருவ மழை காரணமாக, திட்ட தொகுப்பு அணைகளிலும் திருப்பதியான நீர் இருப்பு உள்ளதால், காண்டூர் கால்வாய் வழியாக நீர் தொடர்ந்து எடுக்கப்படுகிறது.இதனால், நீர் வரத்தும், வெளியேற்றமும், ஒரே மாதிரியாக உள்ளதால், நீர் மட்டம், 50 அடிக்கும் குறையாமல், ஒரு மாதமாக தொடர்கிறது.திருமூர்த்தி அணையில், பல ஆண்டுகளுக்கு பின், நடப்பு ஆண்டு, பாசனத்திற்கு நீர் திறந்தும், அணை நீர்மட்டம் குறையாத இந்த நிலை காணப்படுகிறது. இதனால், இடைவெளியின்றி, இரண்டாம் சுற்றுக்கு நீர் வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, தெரிவித்தனர்.

அணை நீர்மட்டம்

திருமூர்த்தி அணையில், மொத்தமுள்ள, 60 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 50.25 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு, வினாடிக்கு, காண்டூர் கால்வாய் வழியாக, 937 கன அடி நீரும், பாலாறு வழியாக, 33 கனஅடி நீர் என, 970 கனஅடி நீர்வரத்து உள்ளது.அணையிலிருந்து, பாசனத்திற்கு, பிரதான கால்வாய் வழியாக, 890 கனஅடி நீரும். தளி கால்வாயில், 41 கனஅடி, குடிநீர், 21, இழப்பு, 4 என, 956 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !