திருப்பூர்:தமிழ்நாடு புத்தொழில் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற, திருப்பூர் 'நிப்ட்-டீ' அடல் இன்குபேஷன் மையத்துக்கு, ஐந்து லட்சம் ரூபாய் வளர்ச்சி நிதி வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில் வளர் காப்பங்கள் உச்சி மாநாட்டின் போது, தமிழ்நாடு 'இன்குபேட்டர் மெச்சூரிட்டி' மாடல் அறிக்கையை, தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் வெளியிட்டார்.அதன் ஒரு பகுதியாக, தமிழக அளவில் சிறப்பாக செயல்படும், 15 சிறந்த தொழில் வளர் காப்பகங்களுக்கு, திறன் மேம்பாட்டுக்கான வளர்ச்சி நிதியாக, தலா, ஐந்து லட்சம் வீதம், 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.அதேபோல், தமிழகத்தில் செயல்படும், 15 தொழில் வளர் காப்பகங்கள் (இன்குபேஷன்) தேர்வு செய்யப்பட்டு, சிங்கப்பூரில் நடந்த, 'ஸ்டார்ட் அப்' புத்தாக்க கருத்தரங்கில் பங்கேற்க அழைத்துச்செல்லப்பட்டன.இதுகுறித்து திருப்பூர் 'நிப்ட்-டீ' அடல் இன்குபேஷன் மைய தலைமை செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், ''அடல் இன்குபேஷன் மையம் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி, ஐந்து லட்சம் ரூபாய் வளர்ச்சி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும். அதுமட்டுமல்லாது, சிங்கப்பூர் கருத்தரங்கில் பங்கேற்கும் வாய்ப்பும், 'நிப்ட் -டீ' அடல் இன்குபேஷன் மையத்துக்கு கிடைத்தது. சிங்கப்பூர் புத்தாக்க நிறுவனங்களின் தொழில் சூழலை புரிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலமாக, உலகளாவிய சிறந்த புத்தொழில் யுத்தியை, இந்திய நிறுவனங்களுக்கு பகிரவும் வாய்ப்பு உருவாகியுள்ளது,'' என்றார்.