தடை... அதை உடை... சரித்திரம் படை!
திருப்பூர் : உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் போர் சூழலையும் கடந்து, சர்வதேச சந்தைகளை வசமாக்கியதால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், தடைகளை உடைத்து வெற்றிப்பாதையில் பயணித்து வருகிறது.நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில், முக்கிய பங்கு வகிப்பது, ஆயத்த ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி. கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் துவங்கி, இந்தியா பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது.நமது ஆயத்த ஆடை வர்த்தகம், அமெரிக்கா, ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளையும், ஐக்கிய அரபு நாடுகளையும் அதிகம் சார்ந்திருக்கிறது. இந்நிலையில், சர்வதேச சந்தைகளை சீர்குலைக்கும் வகையில், போர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக, உக்ரைன் - ரஷ்யா போர் நடந்து கொண்டிருக்கிறது; இதன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது; அமெரிக்காவிலும் கூட, சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. போர் முற்றிலும் நீங்காவிட்டாலும், போர் பாதிப்புகள் இதர நாடுகளில் படிப்படியாக குறைந்து கொண்டே இருக்கிறது.ஒரு பாதிப்பு முற்றிலும் மறைவதற்குள், இஸ்ரேல் போர் மீண்டும் பீதியை கிளப்பியுள்ளது. கடந்தாண்டு அக்., மாதம் துவங்கிய மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா, பாலஸ்தீனம் இடையே போர் மூண்டுள்ளது.உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் போர், செங்கடல் கடல் கொள்ளையர்களால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் என, பல்வேறு பாதிப்புகளை, இந்தியா சமாளிக்க வேண்டியுள்ளது. நேரடி பாதிப்பு இல்லாவிட்டாலும், ஏற்றுமதி வர்த்தகம், அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியிலும் பாதிப்பு உருவாகிறது. மீண்டெழுந்த ஏற்றுமதி வர்த்தகம்
குறிப்பாக, நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்தாண்டு முழுவதும் திக்கி திணறியது; நீண்ட இடைவெளிக்கு பிறகு, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து, மீண்டும் வளர்ச்சிப்பாதையை அடைந்திருக்கிறோம். இந்நிலையில், மீண்டும் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட பதற்றத்தால், சர்வதேச சந்தையில் மீண்டும் குழப்பம் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதை தாண்டி சாதிக்கும் நம்பிக்கையுடன் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர்.