உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சந்திப்பில் பாலம் கட்டும் பணி இழுபறி; தாராபுரம் ரோட்டில் சிக்கல்

சந்திப்பில் பாலம் கட்டும் பணி இழுபறி; தாராபுரம் ரோட்டில் சிக்கல்

உடுமலை; உடுமலை அருகே, நான்கு வழிச்சாலை சந்திப்பில், பாலம் கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டு, எச்சரிக்கை பலகையும் வைக்கப்படாததால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், உடுமலை பகுதியில், பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை சந்திப்புகளில், உயர் மட்ட பால கட்டுமான பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. அதே போல், பாலப்பம்பட்டியில் இருந்து துவங்கும் அணுகுசாலை, தாராபுரம் மாநில நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழிச்சாலையுடன் இணையும் பகுதியில், பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் இழுபறியாக நடக்கிறது. அதே வேளையில், மாநில நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலை இணையும் இடத்தில், பாலம் கட்டுமான பணிக்காக குழி தோண்டப்பட்டு, பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. ரோட்டோரத்தில் குழி இருப்பது தெரியாததால், மாநில நெடுஞ்சாலை மற்றும் அணுகுசாலையில் வரும் வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக அப்பகுதி மாறுவதால், வாகனங்கள் அவ்வழியாக செல்ல முடிவதில்லை. விபத்துகளை தடுக்க அவ்விடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்; இழுபறியாக நடக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும். இதே போல், பல்லடம் மாநில நெடுஞ்சாலை சந்திப்பில் உயர் மட்ட பாலம் கட்டும் பகுதியில், அணுகுசாலை துவங்குவதற்கான எவ்வித அறிவிப்பு பலகைகளும் இல்லை. இதனால், பிற பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டுநர்கள் குழப்பமடைந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை