| ADDED : நவ 22, 2025 06:39 AM
திருப்பூர்: வேலை செய்யும் இடத்தில் சக தொழிலாளியுடன் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ய முயன்ற அண்ணன், தம்பி இருவருக்கும் திருப்பூர் கோர்ட்டில் ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சேர்ந்தவர்கள் மகேந்திரபாலு, 36, தனபால், 32. சகோதரர்கள். இருவரும் திருப்பூர் அணைப்பாளையத்தில் உள்ள சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தனர். அங்கு திருவாரூரைச் சேர்ந்த பாண்டி, சுரேந்திரன், சதீஷ் ஆகியோர் புதிதாக வேலைக்குச் சேர்ந்தனர். அவர்கள் மூன்று பேருடன் சகோதரர்கள் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டது. கடந்த 2023ல், வேலை செய்து வந்த சாயப்பட்டறையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் மகேந்திரபாலு மற்றும் தனபால் இருவரும் கத்தியால், மூன்று பேரையும் குத்திக் காயப்படுத்தினர். இதில் காயமடைந்த மூன்று பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தனர். இது தொடர்பாக 15 வேலம்பாளையம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அண்ணன் - தம்பியை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருப்பூர் எஸ்.சி. எஸ்.டி., சிறப்பு கோர்ட்டில் விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், இதில் தொடர்புடைய மகேந்திரபாலு மற்றும் தனபால் ஆகியோருக்கு, 7 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார்.