புனித பயணத்துக்கு மானியம்; புத்த மதத்தினர் விண்ணப்பிக்கலாம்
உடுமலை; 'புனித பயணத்துக்கு மானியம் பெற, புத்த மதத்தினர் விண்ணப்பிக்கலாம்,' என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது, இது குறித்து, திருப்பூர் கலெக்டர் கூறியிருப்பதாவது: நாக்பூர் தீக் ஷா பூமியில், விஜயதசமி நாளன்று, தர்ம சக்கர பரிவர்த்தன திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தை சேர்ந்த, 150 புத்த மதத்தை சேர்ந்த நபர்கள், 2025 - 26ம் ஆண்டில், தர்ம சக்கர பரிவர்த்தன விழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ள மானியம் வழங்கப்படுகிறது. புனித பயணம் மேற்கொண்டு திரும்புவோருக்கு, ஒரு நபருக்கு அதிகபட்சம், 5 ஆயிரம் ரூபாய் வீதம், நேரடி மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் பயணம் மேற்கொண்டு பயன் பெற விரும்பும் புத்த மதத்தினர் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் செயல்படும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறபான்மையினர் நல வாரிய அலுவலகத்தில், விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். www.bcmbcmw.tn.gov.inஎன்கிற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.