உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விமான நிலையம் அருகே இறைச்சிக்கழிவு மூட்டை வீச்சு

விமான நிலையம் அருகே இறைச்சிக்கழிவு மூட்டை வீச்சு

பல்லடம் : பல்லடம் பகுதியில், கறிக்கோழி உற்பத்தி தொழில் பிரதானமாக உள்ளது. தமிழகம் உட்பட, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.கோழி பண்ணைகளில் உற்பத்தியாகும் முட்டைகளில், அழுகிய முட்டைகள் மற்றும் கறிக்கோழி பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகள் ஆகியவற்றை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், பல பண்ணைகள் இதை பின்பற்றுவதில்லை.அழுகிய முட்டைகள் மற்றும் இறந்த கோழிகளை, திறந்த வெளியில் வீசி செல்வது, பல்லடம் பகுதியில் வாடிக்கையாக உள்ளது.அழுகிய முட்டைகள் பெட்டி பெட்டியாகவும், இறந்த கோழிகள் மற்றும் இறைச்சி கழிவுகளை மூட்டைகளாகவும் கட்டி, ரோட்டோரங்களில் வீசப்படுகிறது. குறிப்பாக, செட்டிபாளையம் ரோடு உட்பட, கே.என்., புரம், காரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலும் அதிகளவு வீசப்படுகின்றன. இவற்றை உண்ண வேண்டி கழுகுகள் உள்ளிட்ட பறவைகள் வானத்தில் வட்டமிடுகின்றன.அருகில் சூலுார் விமான நிலையம் உள்ள நிலையில், பறவைகள் வட்டமிடுவது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற கழிவுகளை, குறிப்பிட்ட துாரத்துக்குள் கொட்ட கூடாது என்ற விதிமுறை உள்ளது.இருப்பினும், விதிமுறை மீறி அழுகிய முட்டைகள், கோழி இறைச்சி கழிவுகள் பரவலாக கொட்டப்படுகின்றன. இது, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவது ஒருபுறம் இருக்க, விமான நிலைய விதிமுறைகளையும் மீறுவதாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ