உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் பழசாச்சு; பராமரிப்பு போயேபோச்சு பயணியர் திண்டாட்டம்

பஸ் ஸ்டாண்ட் பழசாச்சு; பராமரிப்பு போயேபோச்சு பயணியர் திண்டாட்டம்

உடுமலை: உடுமலை பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளதால் பயணியர் திண்டாடி வருகின்றனர். கோவை- -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை பஸ் ஸ்டாண்ட் 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னர், பெரிய மேம்பாட்டு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை. தற்போது புது பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டுக்கு வந்தாலும், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்தே அதிகளவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் போதிய வசதிகள் இல்லாமல் பயணியர் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் ஓடுதளம் முழுவதும் சேதமடைந்து, பல இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மூணாறு வழித்தட பஸ்கள் நிற்கும் இடத்தில் துர்நாற்றம் வீசுகிறது. ஆனைமலை பஸ்கள் நிற்கும் பகுதியில் போதிய இட வசதியில்லை. அங்குள்ள நடைபாதை மற்றும் இருக்கையின் அருகே தற்காலிக ஆக்கிரமிப்புகள் உள்ளது. அதே பகுதியில் முன்பு பயணியர் ஓய்வு அறை பயன்பாட்டில் இருந்தது. தற்போது அக்கட்டடம் பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலையில் உள்ளது. அக்கட்டடத்தை இடித்து விட்டு அங்கு மேற்கூரை அமைத்தால் பயணியர் பயன்பெறுவார்கள். மேலும் பஸ் ஸ்டாண்டில் ஒரு கழிப்பிடம் கூட முறையாக இல்லை. சுற்றுச்சுவர் அருகே திறந்த வெளி கழிப்பிடமாக மாற்றப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்டில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டும் என பயணியர் வலியுறுத்தியுள்ளனர். இருளில் தவிக்கும் பயணியர் உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் என, 300க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு தேவையான குடிநீர், இருக்கை, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. மேலும், இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்டிலுள்ள மின் விளக்குகள் பழுது காரணமாக எரிவதில்லை. உயர் கோபுர மின் விளக்கிலும் ஒரு சில பல்புகள் மட்டுமே எரிகிறது. இதனால், இரவு நேரங்களில் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் இருளாக காணப்படுவதோடு, பயணியர் அமரும் பகுதியிலுள்ள மின் விசிறிகளும் இயங்குவதில்லை. இதனால், இரவு நேரங்களில் பயணியர் இருளில், கொசுக்கடியில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனால் பிக்பாக்கெட், வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே, பஸ் ஸ்டாண்டில் மின் விளக்குகள் முழுமையாக ஒளிர நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி