| ADDED : டிச 25, 2025 05:47 AM
திருப்பூர்: அரசு பஸ்களில் பான் மசாலா பொருட்கள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. ஒசூர் - கிருஷ்ணகிரி வழித்தடத்தில் இயங்கி வரும் பஸ்களில் திடீர் பரிசோதனை நடத்தியபோது, பஸ் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஓரிடத்தில் பஸ்களில் மற்றொரு இடத்துக்கு பார்சல் அனுப்பும் போது, குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, பஸ்களில் பார்சல் வாங்கி செல் கின்றனர். டிரைவர் இருக்கை எதிர்புறம், நடத்துனர் வசம், இருக்கைக்கு கீழ், பஸ்சின் மேல், நடுப்பகுதி உள்ளிட்ட இடங்களிலும் பார்சல் ஏற்றப்படுகிறது. இவ்வாறு ஏற்றப்படும் பார்சல்களில் என்ன பொருள் உள்ளது, சர்ச்சைக்குரிய தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லையா என்பதை உறுதி செய்த பின்பே பஸ்களில் பார்சல் ஏற்ற வேண்டும் என டிரைவர், நடத்துனருக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ''பஸ்களில் பார்சல் ஏற்றும் முன் முழுமையான விபரம் தெரிந்து கொண்டு, ஏற்ற வேண்டும். தேவைப்பட்டால் சோதனையிட வேண்டும் என்பது, வழக்கமான நடைமுறை தான். டிரைவர், நடத்துனர் பிரச்னை தெரியாமல் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதால், அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது'' என்றனர்.