உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின்னலாடை ஏற்றுமதிக்கு சவால்; அமெரிக்காவின் வரி உயர்வு எதிர்கொள்ளப்போவது எப்படி?

பின்னலாடை ஏற்றுமதிக்கு சவால்; அமெரிக்காவின் வரி உயர்வு எதிர்கொள்ளப்போவது எப்படி?

திருப்பூர்: அமெரிக்க 'டேரிப்' உயர்வு அறிவிப்பு, திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்துக்கு சவாலாக மாறலாம். மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நம் நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில், திருப்பூர் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு தான் அதிகளவில் பின்னலாடைகள் ஏற்றுமதியாகின்றன. ஏற்றுமதியில் 34 சதவீத பங்களிப்பாக இது உள்ளது. கடந்த நிதியாண்டில் (2024-25), அமெரிக்காவுக்கு மட்டும், 22 ஆயிரத்து, 486 கோடி ரூபாய்க்கு பின்னலாடை ஏற்றுமதி நடந்துள்ளது. அமெரிக்கா, இந்தியாவுக்கான 'டேரிப்'பை, திடீரென உயர்த்தியுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், பாகிஸ்தான், வியட்நாம், வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளுக்கான வரியை கணிசமாக குறைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் இந்தியாவின் போட்டி பலமடங்கு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. பின்னலாடை ஏற்றுமதிக்கு, இறக்குமதி வரி, 16.50 சதவீதம், 'டேரிப்' 10 சதவீதம் என, அமெரிக்காவின் வரி 26.50 சதவீதமாக இருந்தது. தற்போது, இறக்குமதி வரி 16.50 சதவீதம், 'டேரிப்' 25 சதவீதம் என, 41.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வங்கதேச வரி, 30 சதவீதம் என்பது, 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு, 19 சதவீதமும், இலங்கைக்கு, 20 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கான 'டேரிப்', 25 சதவீதமாக உயர்ந்துள்ளதால், திருப்பூருக்கான ஏற்றுமதி ஆர்டர்கள் இந்தாண்டில் தடைபட வாய்ப்புள்ளது. இந்தியாவுக்கு வரியை உயர்த்தியதுடன், போட்டி நாடுகளுக்கு வரியை குறைத்துள்ளதால், கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் எடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தொழில்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

மத்திய அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்

ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல்: அமெரிக்கா 'டேரிப்' அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த 42 முதல், 45 சதவீதம் வரி இறக்குமதி வரி விதிக்க நேரிடும். அமெரிக்காவுக்கு மட்டும் ஆர்டர் செய்யும் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்படுவர். மற்ற நாடுகளுடன் வர்த்தகம் செய்பவர்கள், ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு கூடுதல் ஏற்றுமதி செய்யலாம். மத்திய அரசு, இதுதொடர்பாக ஆலோசித்து, நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

தற்காலிக சலுகை வழங்குவது அவசியம்

அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு (அபாட்) தலைவர் இளங்கோவன்: அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய, இறக்குமதி வரியுடன், 'டேரிப்' வரியையும் சேர்த்து, அங்குள்ள வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியிருக்கும். ஆர்டர்கள் திடீரென குறைய வாய்ப்புள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு வரி குறைவாக உள்ளது; இந்தியாவுக்கு வரி அதிகம் என்பதால், வர்த்தக வாய்ப்பு குறையும். மத்திய அரசு, இதுதொடர்பாக பேசி, வர்த்தக வாய்ப்பை சீரமைக்க வேண்டும். போட்டி நாடுகளுக்கும், நமக்குமான வரி வித்தியாசம், 5 சதவீதமாக உள்ளது; அதை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு, தற்காலிகமாக சலுகை வழங்க வேண்டும். *

போட்டி நாடுகளுக்கு வரி குறைப்பு

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம்: இந்தியாவுக்கு, அதிக சலுகை கிடைக்கும் வகையில், 10 சதவீதம் 'டேரிப்' இருந்தது. நமக்கு நல்ல சாதகமான சூழல் நிலவும் நிலையில், நமக்கான வரியை உயர்த்திவிட்டு, நமது போட்டி நாடுகளுக்கான வரியை குறைத்துள்ளனர். இதன ்மூலம், நமது போட்டி நாடுகளின் பலம் கூடும். மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ** மத்திய அரசுக்கு பக்கபலமாக இருப்போம் இந்தியாவில், சில நிறுவனங்கள், அமெரிக்காவை மட்டும் நம்பி, 100 சதவீதம் வர்த்தகம் செய்கின்றன. அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் சமாளிக்கலாம். அமெரிக்காவுக்கு மட்டும் ஏற்றுமதி செய்வோர், 'டேரிப்' உயர்வால் நிச்சயம் பாதிக்கப்படுவர். மத்திய அரசு நிச்சயம் மாற்று நடவடிக்கை எடுக்கும்; அரசுக்கு பக்கபலமாக நிற்போம். சர்வதேச சந்தையில், வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், 5 சதவீத வரி வித்யாசம் இருக்கிறது. அதை ஈடுகட்டும் வகையில், 'டியூட்டி டிராபேக்' மற்றும் வட்டி மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். அமெரிக்காவின் வரி உயர்வை சமாளிக்கும் வகையில், தற்காலிகமாக, வர்த்தக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்; நிரந்தரமாக, சுமூக தீர்வை கண்டறிய வேண்டும். - சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை