உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / எலிகளால் சேதம் அதிகரிப்பு : தென்னை விவசாயிகள் கவலை

எலிகளால் சேதம் அதிகரிப்பு : தென்னை விவசாயிகள் கவலை

பொங்கலுார்: திருப்பூர் மாவட்டத்தில் விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற காரணங்களால் பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு லாபகரமானதாக இல்லை. இதனால் பலர் தென்னை சாகுபடிக்கு மாறி வருகின்றனர். பல தானிய சாகுபடி அதிகளவில் நடந்து வந்தால் எலிகள் பெரும்பகுதி காடுகளுக்குச் சென்று விடும். சிறுதானிய உற்பத்தியில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதால் எலிகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும்பாலான எலிகள் தென்னையை நோக்கி திரும்பி உள்ளது. காய்களை அவை கடித்து குதறி விடுகின்றன. ஒவ்வொரு தோப்பிலும் ஏராளமான காய்களை எலிகள் தின்பதால் விவசாயிகளுக்கு பெரியளவில் இழப்பு ஏற்படுகிறது. முன்பெல்லாம் தொழிலாளர்கள் மரத்தில் ஏறி தேங்காய் பறித்தனர். அப்போது மரத்தில் இருந்த தேவையற்ற கழிவுகளை அகற்றி விடுவர். இதனால், எலிகள் ஆந்தைகளிடம் எளிதில் சிக்கிக் கொள்ளும். தற்போது மரம் ஏறும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தொழிலாளர்கள் கீழே இருந்து நீண்ட குச்சியின் உதவியுடன் தேங்காய் பறிப்பதால் மரத்தில் தேவையற்ற குப்பைகள் சேர்ந்து விடுகிறது. இதனால், எலிகள் பதுங்குவதற்கு நல்ல வசதியாகி விடுகிறது. அவை ஆந்தைகளிடமிருந்து தப்பிப்பதற்கு சாதகமான சூழல் நிலவுகிறது. அளவுக்கு அதிகமான ரசாயன உபயோகத்தால் ஆந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எலிகள் தொல்லை அதிகரித்து இருப்பதால் பெருமளவிலான தேங்காய்கள் சேதம் அடைகின்றன. இது தென்னை விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை