பொதுமக்களுக்கு தடையில்லாத குடிநீர் கலெக்டர் உத்தரவு
திருப்பூர்; 'பொதுமக்களுக்கு தடையில்லாத, சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்' என, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. அந்த அடிப்படையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஆறு நகராட்சிகள், 15 பேரூராட்சி, 13 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த, 265 கிராம ஊராட்சிகளுக்கு, குடிநீர் வினியோகம் செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 'நகராட்சி, பேரூராட்சிகளில் 'நமக்கு நாமே' திட்டம், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டம், நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட குடிநீர் மேம்பாட்டு பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும்,' என, கலெக்டர் அறிவுறுத்தினார். இதுதவிர, 'குடிநீர் வினியோகம் தொடர்பாக மக்களிடம் இருந்து வரும் புகார்களை உடனுக்குடன் கள ஆய்வு செய்து, நிவர்த்தி செய்ய வேண்டும்; எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்படும் குடிநீரின் அளவு மற்றும் ஊராட்சிகள் சார்பில் குக்கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி வாயிலாக பெறப்படும் குடிநீர் அளவை கண்காணித்து, ஆய்வு செய்ய வேண்டும். வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் வினியோகிக்கப்படும் குடிநீர் அளவை, மீட்டர் பொருத்தி கண்காணித்து, சீரான நீர் வினியோகம், தடையின்றி வழங்க வேண்டும்,' எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அசோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.