| ADDED : நவ 22, 2025 06:38 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் அறிக்கை: மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு கேபிள், தனியார் கேபிள் நிறுவனங்கள் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள் மாநகரின் பல்வேறு சாலைகளில், மையத்தடுப்புகள் மற்றும் தெருவிளக்கு கம்பங்களில் தங்கள் கேபிள்களை அமைத்துள்ளனர். இதனால், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் பெரும் இடையூறாக உள்ளதாக, போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் தொடர்ந்து வந்தன. இதனால், இப்பணியை வரன்முறைப்படுத்த வசதியாக, அரசு கேபிள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், உரிய பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, நிறுவனங்கள் ஒரு வாரத்துக்குள் தங்கள் கேபிள்களை உரிய அறிவுரைகளின்படி முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். பயன்பாட்டில் இல்லாத கேபிள்கள் அகற்றப்பட வேண்டும். இது குறித்து கள ஆய்வு செய்து, 7 நாளில் உரிய சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். தவறினால் கேபிள்கள் துண்டிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.