இயந்திரங்கள் தருவதாக கூறி நிறுவனம் ரூ.1 கோடி மோசடி?
திருப்பூர்: 'கோன் வைண்டிங்', பனியன் துணி நுால் பிரிக்கும் இயந்திரம் தருவதாக கூறி, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், ஒரு கோடி ரூபாய்க்கு ரூ.1 கோடி வரை ஏமாற்றியதாக, திருப்பூர் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. தி ருப்பூர், ஓடக்காடு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு 'கோன் வைண்டிங்', பனியன் துணியிலிருந்து நுால் பிரித்தெடுக்கும் இயந்திரங்களை வழங்குவதாகவும், இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் நுாலையும், விலை கொடுத்து கொள்முதல் செய்வதாக அறிவித்திருந்தது. தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தோர், சுய தொழில் ஆர்வத்தில், இந்நிறுவனத்திடமிருந்து இயந்திரங்கள் வாங்குவதற்காக, பணம் செலுத்தியுள்ளனர். ஒவ்வொருவரும் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தியிருந்தனர். தொகையை பெற்றுக்கொண்ட அந்நிறுவனம், இயந்திரங்களை அனுப்பாமலும், தயாரித்த நுாலை கொள்முதல் செய்யாமலும் மோசடி செய்வதாக புகார் எழுந்துள்ளது. அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட, சென்னை, தென்காசி, அம்பாசமுத்திரம், விழுப்புரம், தர்மபுரி பகுதிகளைச் சேர்ந்த 12 பேர், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், கலெக்டர் மனிஷ் நாரணவரேயிடம் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த சுதன் என்பவர் கூறுகையில், ''மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம், இந்நிறுவனத்தினர் மொத்தம், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றி உள்ளனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி., அலுவலகங்களில் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். மூன்று மாதங்களுக்குள் தொகையை திருப்பி அளிப்பதாக ஒப்புதல் தெரிவித்து, அந்நிறுவனத்தினர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இன்னும் தொகை வழங்குவதற்கான எந்த நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. உரிய நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு சேரவேண்டிய தொகையுடன், 10 சதவீதம் கூடுதலாக பெற்றுத்தர வேண்டும்'' என்றார்.