கூட்டுறவு தின மராத்தான் ஜூலை 6ல் நடக்கிறது
திருப்பூர் : கூட்டுறவுத்துறை சார்பில் சென்னையில் நடைபெற உள்ள மராத்தானில் பங்கேற்க, விருப்பமுள்ளோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பிரபு வெளியிட்டுள்ள அறிக்கை:சர்வதேச கூட்டுறவு ஆண்டு - 2025 மற்றும் சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் வரும் ஜூலை 6 ம் தேதி, காலை, 5:30 மணிக்கு மினி மராத்தான் நடைபெற உள்ளது. 'ஒருவருக்காக எல்லோரும் ஓடுவோம், எல்லோரும் ஓடி கூட்டு உறவாகுவோம்' என்கிற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெறும் இந்த மராத்தானில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விருப்பமுள்ளோர் அனைவரும் பங்கேற்கலாம்.தீவுத்திடலில் துவங்கும் மராத்தான், சிவானந்தா சாலை வழியாக மன்றோ சிலை வரை சென்று, மீண்டும் தீவுத்திடலை அடையும். 5 கி.மீ., துாரத்துக்கான மராத்தானில், 18 முதல் 40 வயது மற்றும் 40 வயதுக்குமேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். போட்டியில் வெற்றிபெறுவோருக்கு முதல் பரிசு, 30 ஆயிரம் ரூபாய்; இரண்டாம் பரிசு 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாவது பரிசு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ், டி - சர்ட் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.மராத்தானில் பங்கேற்க விரும்புபோர், www.tncu.tn.gov.in/marathon/register என்கிற தளத்தில் முன்பதிவு செய்து, நுழைவு கட்டணம் 100 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 97909 54671 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.