திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியில், தனியார் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் ஊழல் அதிகரித்துவிட்டதாக, அ.தி.மு.க., குற்றம்சாட்டியுள்ளது. குப்பை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாத மாநகராட்சியை கண்டித்தும், வாக்காளர் திருத்த பணிகளை மேற்கொள்ளும் பி.எல்.ஏ.க்கள் மிரட்டப்படுவதை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அ.தி.மு.க. சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருப்பூர் குமரன் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர்கள் ஆனந்தன், சிவசாமி, ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ. விஜயகுமார், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், ஜெ. பேரவை செயலாளர் லோகநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில்,''மாநகராட்சியில், குப்பை வரி மட்டும் உயர்த்தப்பட்டது; திடக்கழிவு மேலாண்மை பணி நடக்கவில்லை. தனியார் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் ஊழல் அதிகரித்துள்ளது. மதுரை மாநகராட்சியில் ஊழல் அதிகரித்து மேயர் ராஜினமா செய்தார். திருப்பூரில் குப்பை பிரச்னை அதிகரித்துள்ளதால், செயல்படாத மேயர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். சுகாதார சீர்கேட்டில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். இல்லாதபட்சத்தில், அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை பாயும்,'' என்றார். பா.ஜ., மாவட்ட தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் செந்தில்வேல், த.மா.கா., மாவட்ட தலை வர் ரவிக்குமார், அ.தி.மு.க. இலக்கிய அணி மாநில துணை செயலாளர் மணிவண்ணன், எம்.ஜி.ஆர்., இளைஞர் பேரவை செயலாளர் வேல்குமார் சாமிநாதன், இணை செயலாளர் சங்கீதா, மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர்.