தாராபுரம் நகராட்சி தலைவருக்கு எதிராக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்?
திருப்பூர்; தாராபுரம் நகராட்சி தலைவர் பாப்புகண்ணனுக்கு எதிராக, ஆளும்கட்சி கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அவரை நீக்க கோரி, தலைமைக்கு மனு அளித்தும், அமைச்சர்களிடம் மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க., - 25 வார்டு, அ.தி.மு.க., - 3, காங் - பா.ஜ., தலா, ஒரு வார்டை தங்கள் வசம் வைத்துள்ளன. ஆளும்கட்சி கவுன்சிலர்கள், 19 பேர் ஒன்றிணைந்து, நகராட்சி தலைவராக உள்ள பாப்புகண்ணனை(தி.மு.க.,) மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக தி.மு.க., கவுன்சிலர்கள் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோரிடம் மனு அளித்துள்ளதோடு, முதல்வர் ஸ்டாலினுக்கும் மனு அனுப்பியுள்ளனர். காரணம் என்ன? தி.மு.க., கவுன்சிலர்கள் அளித்த மனுவில் ''கவுன்சிலர்களை மட்டுமல்லாமல், கட்சி நிர்வாகிகளை மதிக்காமலும், பொருட்படுத்தாமலும் பாப்புகண்ணன் தன்னிச்சையாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். நகராட்சி பணிகளுக்கு, ஒப்பந்ததார்களிடம் அளவுக்கு அதிகமாக கமிஷன் தொகையை பெறுகிறார். ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துகிறார். ''துாய்மை பணியாளர்களை நியமனம் செய்வதில் முறைகேடு, மூடப்பட்ட எடை நிலையத்தின் பெயரில், ஒரு ஆண்டுக்கு பொய்யாக பில் புத்தகம் தயார் செய்து, பல கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார். இதை எதிர்கட்சியினர் பகிரங்கமாக பொது வெளியிலும், மேடையிலும் பேசி வருகின்றனர். தலைவர் பதவியில் இருந்து பாப்புகண்ணனை நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். மீதம் உள்ள பதவிக்காலத்தில் அவரது தலைமையில் எங்களால் செயல்பட முடியாது'' என்று கூறப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பாப்புகண்ணனிடம் கேட்டதற்கு, ''முப்பது வார்டுக்கும், ஏறக்குறைய, 70 கோடி ரூபாய் அளவுக்கு, மூன்றாண்டு காலத்தில், எந்த நகராட்சியிலும் இல்லாத அளவுக்கு பணிகளை மேற்கொண்டு மேம்படுத்தியுள்ளேன். கட்சி நன்றாக இருக்க வேண்டும். பதவி ஆசைக்காக சிலர் செய்கின்ற செயல்தான், தற்போது நடைபெற்று வரும் விஷயம். என்னதான் இருந்தாலும் இது எங்கள் குடும்பம், நாங்கள் பேசி தீர்த்து கொள்வோம்,'' என்றார்.