பாலம் அமைக்க 12 அடி ஆழ பள்ளம் மொபட் விழுந்ததில் தம்பதி பரிதாப பலி
திருப்பூர்: தாராபுரம் அருகே, தரைப்பாலத்துக்காக தோண்டப்பட்ட 12 அடி பள்ளத்தில் மொபட் விழுந்ததில், தம்பதி பலியாகினர்; மகள் படுகாயமடைந்தார்.திருப்பூர் மாவட்டம், குண்டடத்தை சேர்ந்தவர் நாகராஜ், 44, மற்றும் இவரது மனைவி ஆனந்தி, 38. மகள் தீக் ஷிதா, 13 ஆகியோருடன், திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தரிசனம் முடித்து, நேற்று நள்ளிரவு தாராபுரம் திரும்பினர். பின், டூ - வீலரில், ஹெல்மட் அணியாமல் குண்டடம் புறப்பட்டனர். குள்ளாய்பாளையம் அருகே ரோடு விரிவாக்கம் செய்வதற்காக, தரைப்பாலம் கட்டுமான பணி நடந்து வந்தது. அங்குள்ள 12 அடி ஆழ பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக இவர்கள் வந்த மொபட் விழுந்தது. இதில், சம்பவ இடத்திலேயே தம்பதி பலியாகினர்.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தீக் ஷிதா மீட்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.கலெக்டர் கிறிஸ்துராஜ், எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி சாலைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி, அதிகாரிகளை கடிந்துகொண்டனர்.'இறந்த தம்பதிக்கு தலா, 3 லட்சம் ரூபாய், படுகாயமடைந்த சிறுமிக்கு 1 லட்சம் ரூபாய் என, 7 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கான முழு மருத்துவச்செலவையும் அரசே ஏற்கிறது' என, கலெக்டர் கூறினார்.
அதிகாரிகளின் அலட்சியமே
காரணம்விபத்து நடந்த இடத்தில், ரோட்டில் 12 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு, மழை காலங்களில் நீர் வெளியேறும் வகையில் தரைப்பாலத்துடன் கட்டப்படுகிறது. ரோடு பணி நடக்கிறது என்பதை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் முன்னதாக அறிவிப்பு பலகை இல்லை. தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றியும் பெயரளவுக்கு தடுப்பு வைக்கப்பட்டிருந்தது.முறையான தடுப்பு வைத்து அடைக்கப்படாததே, உயிர்ப்பலிக்கு காரணமாக அமைந்தது. பெற்றோர் உடனே இறந்து விட, ரத்த வெள்ளத்தில் சிறுமி ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக உயிருக்குப் போராடியுள்ளார்.