உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிரெடிட் லெட்ஜர் பொருளாதார தேக்கம் இனி இருக்காது! ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் இடர் நீங்கியது

கிரெடிட் லெட்ஜர் பொருளாதார தேக்கம் இனி இருக்காது! ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் இடர் நீங்கியது

திருப்பூர்: ''ஜவுளி உற்பத்தித்துறையில், 12 மற்றும் 18 சதவீத வரியினங்கள், 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், உள்ளீட்டு -வெளியீட்டு வரி வித்யாசம் நீங்கிவிடும். 'கிரெடிட் லெட்ஜர்' பொருளாதார தேக்கமும் களையப்படும்'' என, தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள, 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில், வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக, பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீதான வரியினங்கள் குறைக்கப்பட்டுள்ளது; சில வரிகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. திருப்பூர் பின்னலாடை தொழில் உட்பட, ஜவுளித்துறையில், உள்ளீட்டுவரி - வெளியீட்டு வரி வித்தியாசத்தை நேர்செய்வது குதிரை கொம்பாக இருந்தது. அதாவது, ஜவுளி உற்பத்தி மற்றும் மதிப்பு கூட்டும் பணிக்கான வரியாக, 12 மற்றும் 18 சதவீதம் வரிவிதிக்கப்பட்டிருந்தது; உற்பத்தி பொருள் மீதான வரி, 5 சதவீதமாக இருந்தது. இத்தகைய வரி வேறுபாடுகளை, உள்ளீட்டு வரியாக சரிசெய்ய வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், தொழில்துறையினரின், பெரும் பொருளாதாரம், 'கிரெடிட் லெட்ஜர்' என்ற டிஜிட்டல் பதிவாக தேக்கமடைந்து வந்தது. அனைத்து நிலையிலும் ஒரே அளவில் வரிவிதிப்பு இருந்தால், இத்தகைய சிக்கல் இருக்காது; உள்ளீட்டு வரிக்காக நீண்டநாள் காத்திருக்க நேண்டிய சூழலும் இருக்காது என்று, தொழில்துறையினர் வலியுறுத்தி வந்தனர். திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், ஜி.எஸ்.டி., வரி அறிமுகமான நாளில் இருந்தே, இக்கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். அதன்படி, இந்த கவுன்சில் கூட்டத்தில், 12மற்றும் 18 சதவீதமாக இருந்த வரிகள், 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்வாயிலாக, வெளியீட்டு வரி - உள்ளீட்டு வரி வேறுபாடு களையப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சிரமம் குறைந்தது

கோவிந்தசாமி, திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி மற்றும் விற்பனையாளர் சங்கம்: எலாஸ்டிக் உற்பத்திக்கான, ரப்பர் மற்றும் நுால் கொள்முதலுக்கு, அதிகபட்சமாக, 18 சதவீதம் வரை வரிவிதிக்கப்பட்டது. எலாஸ்டிக் விற்பனையில், 5 சதவீதம் மட்டுமே வெளியீட்டு வரியாக கிடைத்தது; இதனால், உள்ளீட்டு வரி பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், ரப்பர், நுால் ஆகியவற்றின் வரி, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், வரி விவகாரத்தை பராமரிக்கும் சிரமங்கள் குறைந்துள்ளது.

வரவேற்கிறோம்

நாகேஷ், தலைவர், திருப்பூர் 'டைஸ் அண்ட் கெமிக்கல்' வியாபாரிகள் சங்கம்: ஜி.எஸ்.டி., 56 வது கவுன்சிலில், சாயம் மற்றும் கெமிக்கல்கள் மீதான வரி, 18 சதவீதம் என்பதில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. சல்பூரிக் ஆசிட், நைட்ரிக் ஆசிட் மீது வரி குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். மற்ற கெமிக்கல் மீது எவ்வித மாறுபாடும் இல்லை.

3 நாளில் கிடைக்கும்

ஜி.எஸ்.டி., 12 முதல் 18 சதவீதம் இருந்தது, 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், 'கிரெடிட் லெட்ஜர்' பொருளாதார தேக்கம் இனி இருக்காது. பல்வேறு உதிரி பாகங்களுக்கான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. சோலார், காற்றாலைகளுக்கான வரியும், 12 சதவீதமாக இருந்தது, 5 சதவீதமாக மாறியுள்ளது. தற்போது, ஆயிரம் ரூபாய் வரையிலான ஆடைகளுக்கு, 5 சதவீத வரி என்பது, 2,500 ரூபாய் வரையிலான ஆடைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், 'ரீபண்ட்' தொகையில், 90 சதவீதம் உடனடியாக வழங்கப்படும். தற்போது, ஆயிரம் ரூபாய்க்கு மேல் மட்டுமே ரீபண்ட் வழங்கப்பட்டது; இனி, சிறிய தொகையாக இருந்தாலும் வழங்கப்படும். ஜி.எஸ்.டி., பதிவு, மாதாந்திர வெளியீட்டு வரி, 2.50 லட்சம் வரை செலுத்தும் வணிகர்கள் பதிவு, விண்ணப்பித்த மூன்று நாட்களுக்குள், தானியங்கி முறையில் இனி கிடைக்கும். இந்தியாவின் சேவை வழங்கும், வர்த்தக ஏஜன்சி நிறுவனங்களின் வருமானம், ஏற்றுமதி வருமானமாக கருதி வரிச்சலுகை வழங்கப்படும். - செந்தில் இந்திய பட்டயக்கணக்காளர் சங்கம் முன்னாள் தலைவர், திருப்பூர் கிளை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி