பார்வை குறைபாடுள்ளோர் கிரிக்கெட் அணி தேர்வு போட்டி
- நமது நிருபர் -தமிழக அணிக்காக விளையாடவுள்ள, பார்வை குறைபாடுள்ளோருக்கான கிரிக்கெட் அணி தேர்வு, திருப்பூரில் துவங்கியது. இதில் 33 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கம் சார்பில், தமிழக அணிக்கான பார்வையற்றோர் கிரிக்கெட் அணி தேர்வு, திருப்பூர் கணியாம்பூண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் துவங்கியது. ரோட்டரி மாவட்ட கவர்னர் தனசேகர் தேர்வு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு செய்யப்பட்ட, 33 பார்வை குறைபாடுள்ள வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களில் இருந்து சிறந்த வீரர்கள், மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். முன்னதாக, ஏ.வி.பி., கல்லுாரி மாணவியர், பார்வையற்ற வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், தங்கள் கண்களை கட்டிக் கொண்டு, அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினர். ரோட்டரி கவர்னர் உள்ளிட்டோரும் கண்களை கட்டி, அவர்களுடன் விளையாடினர். இதற்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க மாநில பொது செயலர் மகேந்திரன், டார்வின் மோசஸ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.