உடுமலை: மடத்துக்குளத்தில் சி.எஸ்.ஐ., சர்ச் ஊழியர், அங்குள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். மடத்துக்குளம் பெரியவட்டாரம் பகுதியிலுள்ள, சி.எஸ்.ஐ., சர்ச்சில் உதவியாளராக கடந்த, 8 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தவர், கல்லாபுரம், பூளவாடி புதுாரைச்சேர்ந்த ஜார்ஜ் நெல்சன்,45. இவருக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இவர் குடும்பத்துடன், சர்ச் குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரு மாதமாக, தேவாலயத்திற்கு அருகிலுள்ள கல்லறை பகுதியில், பொதுமக்கள் அமரும் வகையில், ஆஸ்பெஸ்ட்டாஸ் செட் வேலை பார்த்து வந்துள்ளனர். அவருடன், 3 பேரும் பணியாற்றிக்கொண்டிருந்தனர். இவர் வேலை செய்யும் போது, யாராவது குறை சொன்னால், அதிகமாக கோபமடைந்து வந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு சர்ச் உறுப்பினர்கள் அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென கோபமடைந்தவர் சர்ச் கதவை பூட்டியதோடு, அங்குள்ள கிணற்றுக்கு ஓடிச்சென்று உள்ளே குதித்துள்ளார். அங்கிருந்தவர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, அவரை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், பயனளிக்காததால், மடத்துக்குளம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து ஜார்ஜ் நெல்சன் சடலமாக மீட்டனர். மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.