உடுமலை: உடுமலை உழவர் சந்தையில், குண்டும், குழியுமாக மாறிய தரை தளத்தால் விவசாயிகள், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இங்கு, உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியை சேர்ந்த, 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவித்த, சின்ன வெங்காயம், கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், புடலங்காய், சுரைக்காய், கீரை வகைகள் என பல்வேறு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். நாள்தோறும் உழவர் சந்தைக்கு நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து காய்கறிகள், பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். உழவர் சந்தையில் விவசாயிகள், பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், தளங்கள் சிதிலமடைந்தும், வளாகத்திலுள்ள தார் ரோடு முழுவதும் பழுதடைந்தும், மண் ரோடாக மாறியுள்ளது. மழைக்காலங்களில், மழை நீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. காய்கறிகள், சேற்றில் வைத்து விற்பனை செய்ய வேண்டிய அவல நிலை உள்ளது. மேலும், மழை காலங்களில் உழவர் சந்தைக்கு முன், கபூர் கான் வீதி முழுவதும் குளம் போல், கழிவு நீருடன், மழை நீர் தேங்கி வருகிறது. இதனால், துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. உழவர் சந்தையில் சேதமடைந்த தளத்தை புதுப்பிக்கவும், விவசாயிகள், நுகர்வோருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.