கிராம சபைக் கூட்டங்களில் கோரிக்கை மழை
திருப்பூர்; மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால், கிராம அளவிலான அடிப்படை தேவைகள் குறித்து, நேற்றைய கிராமசபை கூட்டங்களில் அதிகளவில் மனுக்கள் அளிக்கப்பட்டன. கிராம சபை கூட்டம், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 265 கிராம ஊராட்சிகளிலும் நேற்று நடந்தது. ஒவ்வொரு ஊராட்சியிலும், பற்றாளர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், அரசு திட்டங்கள், வரவு - செலவு அறிக்கைகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மக்கள் பிரதிநிதிகள் பதவி காலியாக இருப்பதால், அதிகாரிகள் பொறுப்பில் நிர்வாகம் நடந்து வருகிறது. இதனால், குடிநீர், தெருவிளக்கு, ரோடு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்னைகளுக்கு, கோரிக்கை வைக்க ஆளில்லை. இதனால், கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து மனு கொடுத்தனர். ஊத்துக்குளி ஒன்றியம், முத்தம்பாளையத்தில் நடந்த கிராம சபாவில், கலெக்டர் மனிஷ் நாரணவரே, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் இணை இயக்குனர் சுந்தரவடிவேலு, உதவி இயக்குனர் (ஊராட்சி) அசோகன், பி.டி.ஓ., சரவணன் உள்ளிட்டோர் பேசினர். கலெக்டர் பேசுகையில், 'ஊராட்சியின் வளர்ச்சிக்காக, திட்டமிடுவது குறித்து, ஊராட்சி மக்களிடம் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தில், கிராம சபா நடத்தப்படுகிறது. ஊராட்சி பகுதி மக்கள், ஒவ்வொரு கிராம சபா கூட்டங்களிலும் கட்டாயம் பங்கேற்று, தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும். நடந்து வரும் பணிகள், நடக்க உள்ள பணிகள், ஊராட்சியின் எதிர்கால பணிகள் என, அனைத்து விவரங்களையும் இதன் வாயிலாக அறிந்துகொள்ளலாம். அரசு திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,' என்றார். சுதந்திர தினவிழாவையொட்டி, ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 18 கோவில்களில் சமபந்தி விருந்து நடந்தது. ஊத்துக்குளி வெற்றி வேலாயுசாமி கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில், கலெக்டர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த சமபந்தியில், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம்பங்கேற்றனர்.