இறையச்சம் கலந்த பக்தியே உயர் தவம்
திருப்பூர்; ''இறைவன் ஒருவன் நம்மை கண்காணிக்கிறான் என்ற, இறையச்சம் கலந்த பக்தியுடன் வாழ்வதே உயர்வான தவம்,'' என, ஸ்ரீராம் கனபாடிகள் பேசினார்.காஞ்சி காமகோடி பீடத்தின், 69வது பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 7வது வார்ஷீக ஆராதனை, கடந்த, 11ம் தேதி, திருப்பூர் மடத்தில் நடந்தது. இதையொட்டி, திருப்பூர்,ஓடக்காடு ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நேற்று, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது.கோவை, ஸ்ரீராம் கனபாடிகள், 'ஸ்ரீஜெயேந்திர விஜயம்' என்ற தலைப்பில் பேசியதாவது:நம்மையும் அறியாமல், இறைவன் நாமத்தை கூறுவதால், எமதுாதர்கள் கூட நம்மிடம் வர அஞ்சுவார்கள்; இறைவன் நாமம் அவ்வளவு மகிமை வாய்ந்தது. வாழ்க்கை முழுவதும் பாவம் செய்தவர் கூட, கடைசி நேரத்தில் இறைவன் பெயரை உச்சரித்தால் பரிகாரம் தேடியவராகிறார்.பக்தி என்பது உன்னதமானது; அதற்காக, நாம் முழு அளவில் தயாராக வேண்டும். எதையும், மனதில் நல்லபடியாக, பக்தியுடன் சிந்தனை செய்து வந்தால், நிச்சயமாக அது நற்செயலாக மாறும். மகான்கள், மனித ரூபமாக பிறந்தவர்கள் என்றாலும், மிகவும் சக்திவாய்ந்தவர்களாக இருந்தார்கள்; தவ பக்தியால் தெய்வ நிலையை அடைந்தனர்.தவம் என்பது, காட்டில் அமர்ந்து, தாடி வளர்த்துக்கொள்வது அல்ல; சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி, அன்றாட பணிகளை சரிவர செய்வதும் தவம்தான்; இறைவன் ஒருவன் நம்மை கண்காணிக்கிறான் என்ற பக்தியுடன் வாழ்வதே உயர்வான தவம். வாழ்க்கை பவித்திரமாக மாற வேண்டுமெனில், நற்சிந்தனையும், இறைபக்தியும் மிகமிக அவசியம்.இவ்வாறு, அவர் பேசினார்.ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பாதுகை தரிசனமும் நடந்தது.