விதவிதமாக குவிந்த டைரிகள்
ஆங்கிலப் புத்தாண்டு நெருங்கியுள்ள நிலையில், திருப்பூரில் உள்ள ஸ்டேஷனரி, புத்தக விற்பனைக் கடைகளில், டைரிகள் விற்பனைக்காக தருவிக்கப்பட்டுள்ளன. நாடுகளின் வரைபடம், சுயவிவரம் பதிய தனி இடம், வெளியூர், வெளிநாடுகளின் பின்கோடு எண் பல்வேறு தகவல்களுடன், புதிய வடிவங்களில் ஸ்டேஷனரி கடைகளில் டைரிகள் வந்துள்ளன. குறைந்த பட்சம், 80 ரூபாய் துவங்கி, அதிக பட்சம், 650 முதல், 900 ரூபாய் விலையில் டைரிகள் விதவிதமாக விற்பனைக்கு உள்ளன.ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனையாளர்கள் கூறியதாவது:இளம் வயதினர் பலர் இ--மெயில், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் தங்கள் சுய விபரங்களை பதிவு செய்து வைத்துக் கொள்கின்றனர். மொபைல் போன் 'நோட்' டில் கையடக்க கருவி போல் சிலர் விபரம் பதிவேற்றி விடுகின்றனர்.இதனால், டைரி வாங்கி, நாள் தவறாமல் தொடர்ந்து எழுதும் பழக்கம், 70 சதவீதம் குறைந்து விட்டது. பள்ளி, கல்லுாரி பருவத்தில் இருந்தே டைரி எழுதி பழகி வந்த ஒரு சிலரே, இன்னமும் டைரியை தேடி பிடித்து வாங்கி எழுதுகின்றனர்.பெரும்பாலும் பரிசு பொருட்களாக வழங்கவும், மற்றவர்களுக்கு வழங்கவும் அதிகளவில் டைரிகள் விற்பனையாகிறது. அதே நேரம், டிச., கடைசி இரு வாரம், பொங்கலுக்குள் டைரி விற்பனையானால் தான் உண்டு; இல்லையெனில், அடுத்த ஆண்டு டிச., வரை டைரி விற்பனையாகாமல் தேக்கமானது. இதனால், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல், அதிக விலை கொடுத்து டைரிகளை வாங்கி நாங்களும் இருப்பு வைப்பதில்லை. டைரி வாங்கும் பெரும்பாலானோர் முந்தைய ஆண்டு பக்கங்களை முழுதும் எழுதாததால், மீண்டும் வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.