உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முத்தூட் மினி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை :நகை அல்லது ரொக்கம் அக்., 10ல் தருவதாக உறுதி

முத்தூட் மினி நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகை :நகை அல்லது ரொக்கம் அக்., 10ல் தருவதாக உறுதி

திருப்பூர் : திருப்பூரில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தை,வாடிக்கையாளர்கள் நேற்று முற்றுகையிட்டனர்; நகையை இழந்த வாடிக்கையாளர்களுக்கு நகையோ அல்லது அதற்குரிய ரொக்கத்தை, வரும் 10ம் தேதி தருவதாக, நிறுவனம் தரப்பில் உறுதிமொழி கடிதம் தரப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டனர். திருப்பூர் காங்கயம் ரோட்டில் முத்தூட் மினி பைனான்ஸ் - தங்க நகை அடகு நிறுவனம் செயல்படுகிறது. கடந்த 24ம் தேதி காலை, இந்நிறுவனத்துக்குள் புகுந்த கொள்ளையர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை கட்டிப்போட்டு, மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 1,381 சவரன் நகை மற்றும் 2.36 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்கின்றனர். இக்கொள்ளையில், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நகையை அடகு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும், நேற்று காலை 10.00 மணியளவில், அந்நிறுவனத்துக்கு வந்தனர்; 50க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர். அறிவிப்பு நோட்டீசில் இருந்த கொள்ளை போன நகை குறித்த எண்களுடன், தங்களிடம் இருந்த ரசீது எண்களை ஒப்பிட்டு பார்த்தனர். அங்கிருந்தவர்களில் பலரது நகைகள் கொள்ளை போயிருப்பது உறுதியானது. அலுவலகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த அலுவலர்களை முற்றுகையிட்டு, உடனடியாக தங்களது நகைகளை திருப்பி தர வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்த முடியாமல், அலுவலர்கள் திணறினர். தகவலறிந்து வந்த திருப்பூர் ரூரல் போலீசார் எஸ்.ஐ.,கள் சிவக்குமார், ராஜ்குமார், அண்ணாதுரை உள்ளிட்டோர் வாடிக்கையாளர்களை சமாதானப்படுத்தினர். நிறுவன அலுவலர்களிடம் பேச்சு நடத்தினர். இதன் பின், நகை பறிகொடுத்த வாடிக்கையாளர்களுக்கு, வரும் அக்., 10ம் தேதியன்று, ரொக்கம் தேவையென்றால் ரொக்கம், நகை வேண்டும் என்றால், தகுதியான நகை கடையில் இருந்து நகையாக பெற்று தரப்படும் என உறுதியளித்து, தலைமை நிர்வாக அதிகாரி கையெழுத்திட்ட கடிதம் தரப்பட்டது; அங்கிருந்த வாடிக்கையாளர்களுக்கு ஜெராக்ஸ் நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு வாடிக்கையாளர்கள் திரும்பிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை