| ADDED : செப் 04, 2011 11:06 PM
உடுமலை : குறிச்சிக்கோட்டை ஊர்ப்புற நூலகத்திற்கு நிரந்தர கட்டடம் அமைக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக தொழில் துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு
அளிக்கப்பட்டது. உடுமலை அருகே குறிச்சிக்கோட்டையில், கடந்த 2003ல்
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் ஊர்ப்புற நூலகம் துவங்கப்பட்டது. தற்போது
இந்த நூலகத்தில், 1,010 உறுப்பினர்களும், 4 ஆயிரத்து 281 நூல்களும் உள்ளன.
இந்த நூலகத்திற்கு சொந்த கட்டடம் இல்லாததால் தற்காலிகமாக மகளிர் சுய
உதவிக்குழு பணிமனை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் போதிய
இடவசதி இல்லாததால், புத்தகங்கள் வைப்பதற்கும், வாசகர்கள் அமர்ந்து
படிப்பதற்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே ஊர்ப்புற
நூலகத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என
வாசகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து ஊரக தொழில்துறை
அமைச்சரிடம் பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், 'குறிச்சிக்கோட்டை
ஊர்ப்புற நூலகத்தை நாள்தோறும் 150க்கும் மேற்பட்ட மாணவர்களும், மக்களும்
பயன்படுத்தி வருகின்றனர். இதே கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்
கீழ் துவங்கப்பட்ட நூலகம் சொந்த கட்டடத்தில் இயங்கி வருகிறது. ஊர்ப்புற
நூலகத்தை இந்த கட்டடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டும். இரண்டு நூலக
புத்தகங்களை வைக்கவும், வாசகர்கள் அமர்ந்து படிக்க தேவையான இடவசதியும்
அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகத்தில் உள்ளது. எனவே இது குறித்து உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.