மாற்றுத்திறனாளிகள் குவிந்தனர் ஒரு மாதம் கழித்து நடந்த மருத்துவ முகாமில்... l உங்களுடன் ஸ்டாலின் முகாமால் வந்த சிக்கல்
திருப்பூர்: 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமுக்காக, கடந்த ஒரு மாதமாக மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் ரத்து செய்யப்பட்டதால், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில், மாற்றுத்திறனாளிகள் கூட்டம் அதிகரித்தது. கூட்டத்தினரை கட்டுப்படுத்துவதில், அலுவலர்கள் சிரமப்பட்டனர். திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டுவந்தது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படும் இம்முகாமில், கண், காது, மூக்கு தொண்டை, மனநலம், நரம்பியல், எலும்புமுறிவு மருத்துவர்கள் ஒரே இடத்தில், மாற்றுத்திறனாளிகளை பரிசோதிக்கின்றனர். அனைத்து மருத்துவர்களையும் ஒரே இடத்தில் சந்தித்து சான்று பெற முடிவதாலும்; பரிசோதனைக்குப்பின் உடனடியாக அடையாள அட்டை வழங்குவதாலும், வாராந்திர முகாமில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஜூலை 15 முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இதையடுத்து, ஜூலை 18 முதல், வாராந்திர மாற்றுத்திறனாளிகள் முகாம் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்படவில்லை. இதனால், மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள், காலாவதியான அடையாள அட்டைகளை புதுப்பிக்க முடியாமலும், புதிதாக பதிவு செய்து அட்டை பெற முடியாமலும் தவித்தனர். கட்டுப்படுத்த திணறல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, வாராந்திர மருத்துவ பரி சோதனை முகாம் நடத்தப்பட்டது. ஒரு மாதத்துக்குப்பிறகு நடத்தப்பட்டதால், நேற்றைய முகாமில், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகள், உடன் வந்த பாதுகாவலர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்துவதில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினருக்கு சிரமம் ஏற்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நல அலவலகம் சார்பில், ஐந்து டேபிள்கள் போடப்பட்டு, ஆதார் உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப படிவம் எழுதி கொடுக்கப்பட்டது. மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பு விகிதத்தை பரிசோதித்து, சான்று வழங்கினர். காலை, 10:30 மணிக்கு துவங்கிய முகாம், மதியம், 3:00 மணி வரை நடந்தது.முகாமில், மொத்தம் 257 மாற்றுத்திறனாளிகளுக்கு, அடையாள அட்டைக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் மாற்றுத்திறனாளிகள் வந்ததால், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினரும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், விண்ணப்பம் எழுதவும் சிரமப்பட்டனர். நெரிசலில் 'நீ முந்தி, நான்' என மாற்றுத்திறனாளிகள் முண்டியடித்ததனர். 'வீண் அலைக்கழிப்பு' முகாம் முடிய தாமதமாகிவிட்டதால், நேற்றைய முகாமில் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. வரும் 25ம் தேதி, மதியம், பாதுகாவலர்கள் மட்டும் வந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அட்டை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமுக்கு வரவழைத்து, விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு, மீண்டும் வாராந்திர முகாமுக்கு செல்லுங்கள் என கூறி, தங்களை இப்படி வீணாக அலைக்கழிப்பதாக, மாற்றுத்திறனாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 'உங்களுடன் ஸ்டா லின்' முகாமில் அடையாள அட்டை பதிவுக்கு விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்த வேண்டும்; கலெக்டர் அலவலகத்தில், வாரந்திர மருத்துவ பரிசோதனை முகாமை, வழக்கம்போல் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளின்கோரிக்கையாக உள்ளது. நினைத்தது ஒன்று;நடப்பது வேறொன்று'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில், 15 அரசு துறை சார்ந்த 45 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், கடனுதவி, ஸ்கூட்டர், செயற்கைக்கால் உள்பட உதவி உபகரணங்கள், பராமரிப்பாளர் உதவித்தொகை மட்டுமின்றி அடையாள அட்டைக்காகவும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வாராந்திர முகாம் நிறுத்தப்பட்டதையடுத்து, கூட்ட நெரிசல், போக்குவரத்து சிரமம் உள்பட பல்வேறு இன்னல்களுக்கிடையே, மாற்றுத்திறனாளிகள் பலரும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்று, அடையாள அட்டைக்காக விண்ணப்பம் அளித்துவந்தனர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் விண்ணப்பித்தால் போதும், தானாக அடையாள அட்டை வந்துவிடும் என்றே மாற்றுத்திறனாளிகள் பலரும் எண்ணினர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமிலோ, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து, வெறும் எண்ணிக்கைக்காக, விண்ணப்பங்களை பெறுகின்றனர்; 'கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் சென்று அடையாள அட்டை பெற்றுக்கொள்ளுங்கள்,' என கூறிவிடுகின்றனர். வழக்கமான வாராந்திர முகாமில், 60 முதல் 70 மாற்றுத்திறனாளிகள் தங்கள் பாதுகாவலர்களுடன் பங்கேற்பர். இதனால், மிக சுலபமாக மருத்துவ பரிசோதனைகள் முடித்து, அடையாள அட்டை பெற்றிருப்பர். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமுக்காக, வாராந்திர முகாமை நிறுத்தியதால், நேற்று, மாற்றுத்திறனாளிகள், பாதுகாவலர்கள் என, 500க்கும் மேற்பட்டோர் வரவேண்டியதாயிற்று. இவர்களில், 100 பேர், ஏற்கனவே தங்கள் பகுதியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பங்கேற்று, விண்ணப்பித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.