லாரி டிரைவருக்கு சிறை; மாவட்ட கோர்ட் உறுதி
திருப்பூர்; லாரி டிரைவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை மாவட்ட கோர்ட் உறுதி செய்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம், 38. கடந்த 2016ல் இவர் ஓட்டி வந்த லாரி, மங்கலம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சின்ன அய்யன் கோவில் பிரிவு பகுதியில் ஒரு கார் மீது மோதியதில், காரை ஓட்டி வந்த கதிரேசன் உயிரிழந்தார். மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருப்பூர் ஜே.எம். 4 கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதில் கடந்த 2023ல், ஆறுமுகத்துக்கு ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து திருப்பூர் முதலாவது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் அவர் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனு கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் விவேகானந்தம் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி பத்மா, ஜே.எம். கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்து, அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.