தீபாவளி திருநாள் கொண்டாட்டம்
உடுமலை: உடுமலை பகுதிகளில், மக்கள் புத்தாடைகள் அணிந்தும், வானில் வர்ண ஜாலம் காட்டும் பட்டாசுகள், சரவெடி சத்தங்களும், வண்ணமயமான மத்தாப்புகள் என தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வாழ்வில் தீமைகள் விலகி, மகிழ்ச்சி பொங்கும் தீப ஒளி பரவும், தீபாவளி திருநாளை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். கடந்த ஒரு வாரமாகவே, உடுமலை நகரில், பண்டிகைக்கான பட்டாசு, புத்தாடைகள் வாங்க நகரம் மட்டுமன்றி, கிராமப்பகுதிகளில், தீபாவளி பண்டிகை களை கட்டத்துவங்கியது. நேற்று முன்தினம் இரவு முதலே, அனைத்து பகுதிகளிலும், பட்டாசுகள் வெடித்து கொண்டாடத்தை துவக்கினர். அதிரும் வெடிச்சத்தங்களும், வானில் வர்ண ஜாலம் காட்டும் பட்டாசுகளும், வண்ண மத்தாப்புகள் என, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, தீபாவளி பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். நேற்று பாரம்பரிய முறைப்படி, அதிகாலை எழுந்து, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், உறவுகளுக்குள் மகிழ்ச்சியை பகிர்ந்தும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.