தரம் குறைந்த நீரில் ஐஸ் தயாரிக்கக்கூடாது
திருப்பூர்; 'கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் குடிசைத் தொழில் போன்று நடந்து வரும் ஐஸ் தயாரிப்பில், சுகாதாரமான நீர் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்' என, உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் குளிர்ச்சி தரும் இளநீர், நுங்கு, தர்பூசணி, கரும்புச்சாறு மற்றும் பழ ஜூஸ்கள் உள்ளிட்டவற்றை, மக்கள் வாங்கி உண்கின்றனர். பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஐஸ் கிரீம் வாங்கி உண்பதில் விருப்பம் காண்பிக்கின்றனர்.இந்நிலையில், பல்வேறு இடங்களில் குடிசைத் தொழில் போன்று, குச்சி ஐஸ் தயாரிக்கும் பணியில் பலரும் ஈடுபடுகின்றனர்.உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறியதாவது:ஐஸ் கட்டி தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். சிறிய அளவில் ஒரு 'ப்ரீசர்' மட்டுமே வைத்துக் கொண்டு, பலரும் ஐஸ் தயாரிப்பில் ஈடுபடுகின்றனர். உரிமம் பெற்று, பாதுகாக்கப்பட்ட குடிநீரில் தான், ஐஸ் உற்பத்தி செய்ய வேண்டும். சிலர், இறைச்சிகளை பதப்படுத்துவதற்கும் ஐஸ் தயாரிக்கின்றனர்; இத்தகைய ஐஸ் கட்டி பயன்படுத்துவோர், தரம் குறைந்த நீரை பயன்படுத்துகின்றனர்.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உண்பதற்குரிய ஐஸ் தயாரிப்புக்கு, தரமான, பாதுகாக்கப்பட்ட நீரைதான் பயன்படுத்த வேண்டும். தரமற்ற நீரை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஐஸ் கட்டிகளை உண்பதன் வாயிலாக, சளி, காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக, ஆய்வு மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.