உடுமலை: கறவை மாடுகளில், பால் உற்பத்தியை பாதிக்கும், 'கீடோசிஸ்' நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, சினை காலங்களில், சரிவிகித சத்து கலந்த உணவை அளிக்க வேண்டும் என, கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை சுற்றுப்பகுதிகளில், பால் உற்பத்திக்காக கறவை மாடுகள் அதிகளவு பராமரிக்கப்படுகின்றன. இந்த மாடுகளில், பால் உற்பத்தியை பாதிக்கும் 'கீடோசிஸ்' நோய்த்தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இந்த நோய் அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள் குறித்து, உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவ சிகிச்சையியல் துறை உதவி பேராசிரியர் இன்பராஜ் கூறியதாவது: கீடோசிஸ் எனப்படும் பால் உற்பத்தி குறைபாடு நோய், சினை மாடுகளின் போதுமான அளவு ஊட்டச்சத்து அளிக்காமல் இருப்பதால் ஏற்படுகிறது. கன்று ஈன்ற பிறகு, ரத்த குளுக்கோஸ் அளவு குறைந்து, 'நெகடிவ் எனர்ஜி பேலன்ஸ்' நிலைக்கு தள்ளப்படுகிறது. அப்போது சில நச்சு வேதிப்பொருட்கள் அதிகளவு சுரந்து, பல்வேறு பாதிப்புகளை மாடுகளுக்கு ஏற்படுத்துகின்றன. நோய் அறிகுறிகள் மாடுகளுக்கு பசியின்மை, பால் உற்பத்தி குறைதல், உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படும். உறுதியான உலர்ந்த சாணம் மற்றும் சில நேரங்களில் தள்ளாடி நடப்பது, நாக்கை சுழற்றி கொண்டே இருப்பது, கண் பார்வை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். நோய் தாக்கம் அதிகரித்தால், வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோயை எளிதாக கண்டறிய முடியும். பாதிக்கப்பட்ட மாடுகளை கால்நடை மருத்துவரை அணுகி, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். மேலும், 'புரோபிலீன் கிளைகோல்', எனப்படும் மருந்தை வாய் வழியாக தினமும், 250 கிராம் என்றளவில், 3 முதல் 5 நாட்கள் வழங்கலாம். சினை காலங்களில் கறவை மாட்டுக்கு தேவையான அளவு சரிவிகித நார்ச்சத்து, பிரதான சத்துகள் கலந்த உணவை வழங்கினால், நோய் வராமல் பாதுகாக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.