உடுமலை:வயிற்றுக்கு உள்ளே கன்று இறந்த நிலையில், வீங்கிய வயிற்றுடன் அவதிப்பட்ட இரு பசுக்களுக்கு, அறுவை சிகிச்சை செய்து கன்றுகள் வெளியே எடுக்கப்பட்டது.கால்நடை வளர்ப்போர், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை சிகிச்சை அளிக்கும் வகையிலும், பயன்பெறும் வகையிலும், உடுமலையில், பன்முக கால்நடை மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, இரண்டு பசுக்கள், பிரசவிக்க இயலாத நிலையில், உயர்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.பசுக்களை காப்பாற்றும் வகையில், மருத்துவமனை தலைமை மருத்துவர் ராமசாமி தலைமையில், டாக்டர்கள் நிஷா, கோவிந்தராசு, சுகன்யா, மணிமேகலை, ராஜன், நந்தினி, ராஜாசொக்கப்பன் அடங்கிய குழுவினர் பசுக்களை பரிசோதித்தனர்.வயிற்றுக்குள் கன்றுக்குட்டி இறந்த நிலையில், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். அறுவை சிகிச்சை செய்து, வயிற்றுக்குள் இறந்த நிலையில் இருந்த கன்றுகளை அகற்றி, தாய் பசுக்களை காப்பாற்றினர்.இதுகுறித்து, கால்நடை துறையினர் கூறியதாவது: மருத்துவக்குழுவினர் துரிதமாக செயல்பட்டு அறுவை சிகிச்சை வாயிலாக, வயிற்றுக்குள் இறந்த கன்று அகற்றப்பட்டதால், பசுக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு குணமடைந்தவுடன், உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். கால்நடை வளர்ப்போர், தங்களது கால்நடைகளுக்கு ஏதாவது பிரச்னை கண்டறியப்பட்டால், உடனடியாக அரசு கால்நடை மருத்துவமனை அணுகி, எவ்வித பாதிப்பின்றியும் காப்பாற்றி விடலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.