தடகள ஆர்வத்தை குலைத்து விடாதீர்கள்
தி ருப்பூர் மாவட்ட அளவிலான தடகளப்போட்டி, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில், இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் ஆர்வம் தடகளத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் பங்கேற்றனர். விளையாட்டின் பயனறிந்து பெற்றோர் மற்றும் சில கிளப்கள் மாணவர்களை ஊக்குவிக்கின்றனர். தடகளத்தில் குண்டு, வட்டு எறிதல், உயரம், நீளம் தாண்டுதல், ஓட்டம் போன்ற போட்டிகள் இருக்கின்றன. ஒரு மாணவர் மூன்று போட்டிகளில் பங்கேற்கலாம். ''மாணவர்களின் தடகளம் உள்ளிட்ட விளையாட்டு ஆர்வத்தை குலைத்துவிடாதீர்கள்'' என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள். பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும் முருகன், உடற்கல்வி ஆசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கருப்பகவுண்டன்பாளையம்: ஊட்டச்சத்து மிக்க உணவு, உடலுக்கு தேவையான ஓய்வு, நல்ல பயிற்சி, மாணவரின் ஈடுபாடு மற்றும் பண நோக்கமின்றி மனதார கற்றுக்கொடுக்கும் நல்ல பயிற்சியாளர் இவையெல்லாம் சரியாகக் கிடைத்தால் ஒவ்வொரு வரும் தடகளத்தில் நன்கு முன்னேறலாம். கோவில்வழி இடத்தில் உள்ள மைதானத்தில் தனிப்பட்ட முயற்சியில் மாணவர்களுக்கு இலவச பயிற்சியளித்து வருகிறேன். ஒரு மாணவன் 10, 11, 12ம் வகுப்பில்தான் தன் திறமையின் உச்சத்தை காண்பித்து விளையாட முடியும். அவனை வெற்றி பெற வைத்து நல்ல நிலைக்கு கொண்டுவிடலாம் என்று எண்ணும் போது, பெற்றோர் சிலர், அவனை விளையாட்டிலிருந்து விலக்குகின்றனர். ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் உள்ளன. அதில் விளையாட்டிற்கு அதிகப்படியாக ஒதுக்குவது 20 நாட்கள் மட்டுமே. மீதம் இருக்கும் 190 நாட்கள் படிக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் 20 நாட்கள் விளையாட்டினால் தான் மாணவன் படிப்பதில்லை என்று விளையாட்டை குறை கூறுகின்றனர். நான் 16 வருடமாக பணிபுரிகிறேன். இதுவரை என்னிடம் பயின்ற ஒருவர்கூட தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. விளையாட்டால், மாணவர் மனம் துாய்மையாகும், உடல்நலம் மேம்படும். விளையாடாமல் வீட்டில் 'சும்மா' இருந்தால் நோய்களும் வரும், அந்த நேரத்தில் செல்போன், தொலைக்காட்சி பார்ப்பது, என்று தேவையற்ற பொழுதுபோக்கையே மனம் விரும்பும். ஆனால் விளையாடும்போது, உடல் சோர்வாகும், நல்ல உறக்கம் வரும், உடல், மனநலம் மேம்படும். புத்தகத்தை மாணவனிடம் பறித்தால் மற்றொரு புத்தகத்தையும் சேர்த்து கொடுத்து விடுவான். ஆனால் 'பேட்'டை பறித்தால் மனம் உடைந்து போவான். இயற்கையாக இருக்கும் இந்த ஆர்வத்தை தடுக்காதீர்கள், விளையாட அனுமதியுங்கள். திறனும், வேகமும் முக்கியம் மகேந்திரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்: குழு விளையாட்டின் போது, அனைவரின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே வெல்ல முடியும். தனிநபர் விளையாட்டைப் பொறுத்தவரை பிறரை விட எந்த அளவு திறனும் வேகமும் அதிகம் இருக்கிறதோ அப்போதுதான் வெற்றி பெற முடியும். தடகளம் பொறுத்தவரை வேகம் மிக முக்கியம். கால்பந்து, கிரிக்கெட் போன்ற குழு விளையாட்டில் நாம் நன்றாக விளையாடினால் மட்டும் போதாது; கூட இருப்பவர்களும் நன்றாக விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். ஆனால் தடகளம் போன்ற தனி விளையாட்டில் வெற்றியானது, தன்னை மட்டுமே சார்ந்துள்ளது. திருப்பூரைப் பொறுத்தவரை, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி விளையாடுகின்றனர், வெல்கின்றனர். தனியாக சிறப்பு பயிற்சி எடுக்க முடியாத மாணவர்க்கும், அரசுப்பள்ளி மாணவர்க்கும், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் இலவசமாக பயிற்சியளிக்கப்படுகிறது.