குப்பை தொட்டியான குடிநீர் தொட்டி; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
உடுமலை; கிராமங்களில் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட தொட்டிகள், பயன்பாடு இல்லாமல் வீணாகி வருவது குறித்து, ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், பால் உற்பத்திக்காக அதிகளவு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் மாடுகளை புறம்போக்கு நிலங்களுக்கு மேய்ச்சலுக்காக அழைத்துச்செல்கின்றனர்.இவ்வாறு, செல்லும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக, கிராம பொது கிணறுகளின் அருகில், தொட்டி கட்டி தண்ணீர் நிரப்பும் நடைமுறை இருந்தது.பல்வேறு காரணங்களால், பொதுக்கிணறு பயன்பாடு இல்லாமல் உள்ளன. இதையடுத்து, கால்நடை வளர்ப்போர் கோரிக்கை அடிப்படையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.இந்த தொட்டிகளுக்கு, உள்ளூர் நீராதாரங்களான கிணறு மற்றும் போர்வெல்களில் இருந்து இணைப்பு வழங்கி, தண்ணீர் நிரப்ப, ஒன்றிய நிர்வாகங்கள் வாயிலாக ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.இந்த அறிவுறுத்தல்களை பெரும்பாலான ஊராட்சி நிர்வாகங்கள் பின்பற்றவில்லை. இதனால், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது.இது குறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கால்நடை வளர்ப்போர் அதிருப்தியில் உள்ளனர்.