திருப்பூர்:மின் கட்டண உயர்வு, திருப்பூரில் பாலிபேக், அட்டைப்பெட்டி உற்பத்தி துறையினரை திக்குமுக்காடச்செய்துள்ளது.ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுக்காக திருப்பூரில் தயாரிக்கப்படும் பின்னலாடை ரகங்கள், பாலிபேக்களில் பேக்கிங் செய்யப்பட்டு, அட்டைப்பெட்டிகளில் வைத்து அனுப்பிவைக்கப்படுகிறது. பாலிபேக் மற்றும் அட்டை பெட்டி உற்பத்தி துறையினருக்கு, புதிய மின் கட்டண உயர்வு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.தடுமாறும் உற்பத்தியாளர்கள்திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க தலைவர் சண்முகம்:திருப்பூரில் 250 பாலிபேக் உற்பத்தி நிறுவனங்கள் இயங்குகின்றன. உள்நாட்டு, ஏற்றுமதி ஆயத்த ஆடைகளை பேக்கிங் செய்வது, காம்பாக்டிங் துணி ரோல்களை பேக்கிங் செய்வதற்கான அனைத்துவகை பாலிபேக் ரகங்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னலாடை துறை தேவைக்கு நாளொன்றுக்கு 150 டன்னுக்கு மேல் பாலிபேக் உற்பத்தி செய்வது அவசியமாகிறது. இரண்டு மணி நேரத்துக்கு தொடர்ந்து தடையில்லா மின்சாரம் கொடுத்தால் மட்டுமே மெல்ட்டிங் மெஷின் தயாராகும்; பாலி புரொப்லின் மூலப்பொருளை உருக்கி, பிளாஸ்டிக் உற்பத்திக்கு தயார்படுத்தமுடியும்.மின் நிலை கட்டணம், உச்சபட்ச நேரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை நிலைதடுமாறிக்கொண்டிருக்கிறது. இச்சூழலில், மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது, அதிக மின் பயன்பாடுள்ள பாலிபேக் உற்பத்தி துறையினரை மிக கடுமையாக பாதிக்கச் செய்துவருகிறது. உற்பத்தி செலவினம் உயர்ந்துள்ளதை எவ்வாறு ஈடு செய்வது என தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம். தமிழக அரசு, தொழில் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, மின்கட்டண உயர்வை வாபஸ் பெறவேண்டும்.இதே நிலை நீடித்தால் சிக்கல்தென்னிந்திய அட்டை பெட்டி உற்பத்தியாளர் சங்க (கோவை மண்டலம்) தலைவர் சிவக்குமார்:பின்னலாடைகள், உணவுப்பொருட்கள், ஆட்டோமொபைல் என அனைத்து துறையின் பேக்கிங்கிற்கும் அட்டைப்பெட்டி அவசியமாகிறது. பாலிபேக்கை போன்று, அட்டை பெட்டி உற்பத்தி நிறுவனங்களும் அதிக மின் பயன்பாடு கொண்டவை. ஒன்றரை மணி நேரம் மின்சாரம் வழங்கினால்தான் அட்டை பெட்டி தயாரிக்கும் ஹீட்டர் மெஷினை தயார்ப்படுத்தமுடியும்.70 எச்.பி., முதல் 120 எச்.பி., திறன் கொண்ட மின் இணைப்பு பெற்று, அட்டைப்பெட்டி நிறுவனங்கள் இயங்குகின்றன. கிராப்ட் காகிதம், பேஸ்ட் உள்பட அனைத்து மூலப்பொருட்கள் விலை, தொழிலாளர் சம்பளம் உயர்வால் அட்டைப்பெட்டி நிறுவனங்கள் தடுமாறிவருகின்றன; தற்போது மின் கட்டணமும் உயர்ந்துவிட்டது. அட்டைப்பெட்டி உற்பத்தி செலவினம் 4.83 சதவீதம் அதிகரித்துள்ளது. அட்டைப்பெட்டி விலையை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உச்சபட்ச நேர கட்டணம், மின்நிலை கட்டண உயர்வு, புதிய மின் கட்டண உயர்வால், தமிழகத்தில் அட்டை பெட்டி உற்பத்தி துறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதே நிலை நீடித்தால், அட்டைப்பெட்டி உற்பத்தி நிறுவனங்களும், சலுகைகள் வழங்கும் வெளிமாநிலங்களை நோக்கி நகர்ந்து சென்றுவிடும்.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிலையை கருத்தில் கொண்டு, உச்சபட்ச நேரக் கட்டணம், மின் நிலை கட்டணங்களை குறைப்பது, புதிய மின் கட்டண உயர்வை வாபஸ் பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெளிமாநிலத்துக்கு நகரும் அபாயம்
''மின் கட்டண உயர்வால், தொழில்துறையினர் வெளி மாநிலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்று திருப்பூர், அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துரத்தினம் கூறினார். திருப்பூர் அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்து ரத்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:தொழில் துறைக்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் மின் கட்டணம் ஒரு ரூபாய் 50 பைசா கூடுதலாக உள்ளது. மற்ற மாநிலத்தில் ஜவுளி துறைக்கு மின் கட்டணத்தில் இரண்டு ரூபாய் 50 பைசா மானியம் வழங்கப்படுகிறது. மின் கட்டண உயர்வால் 50 சதவீத தொழில் துறையினர் வெளி மாநிலம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் வெளிநாட்டு தொழில் முனைவோருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உள்நாட்டு தொழில் முனைவோருக்கு கொடுப்பதில்லை.நாங்கள் மின் கட்டணத்தை குறைக்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி விட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை. அனைத்து கட்சியினரும் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட முன் வர வேண்டும். யாரும் மின் கட்டணம் செலுத்தக்கூடாது என அறிவிக்க வேண்டும். இதன் மூலம் ஒரு தீர்வு ஏற்படும். இவ்வாறு, அவர் கூறினார்.