உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேசிய வேலை உறுதி திட்டத்தில் விவசாய பணி: தேர்தல் வாக்குறுதியில் கொண்டு வர வலியுறுத்தல்

தேசிய வேலை உறுதி திட்டத்தில் விவசாய பணி: தேர்தல் வாக்குறுதியில் கொண்டு வர வலியுறுத்தல்

பல்லடம்:தேசிய வேலை உறுதி (நுாறு நாள் திட்டம்) திட்டத்தில் விவசாய பணி களை மேற்கொள்ள வேண் டும் என்ற கோரிக்கை, அனைத்து அரசியல் கட்சி களின் தேர்தல் வாக்குறுதியிலும் இடம்பெற வேண்டும் என, விவசாய சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. ஓட்டுக்களை பெறும் நோக்கில், சில கட்சிகள், தேர்தலில் இடம்பெற வேண்டிய வாக்குறுதிகள் குறித்து இப்போதே திட்டமிட்டு வருகின்றன. இவ்வகையில், விவசாயிகளின் பிரதான கோரிக்கை அனைத்து கட்சி தேர்தல் வாக்குறுதிகளிலும் இடம்பெற வேண்டும்.நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள எண்ணற்ற தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர் என்பதை மறுக்க இயலாது. ஆனால், இத்திட்டம் துவங்கியதன் காரணமாக, விவசாயப் பணிகளுக்கு வரும் கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.இளம் வயதினர், முதியவர்கள் என யாருமே விவசாய பணிக்கு வர மறுக்கின்றனர். விவசாயத்தில் அதிக சம்பளம் கொடுத்தாலும் தொழிலாளர்கள் வர மறுக்கின்றனர். இது, விவசாயத் தொழிலை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக, விவசாயிகள் பலர், விவசாயம் மேற்கொள்ளும் பரப்பளவுகளை குறைத்துக் கொள்கின்றனர். இதனால், உணவு உற்பத்தி குறைவதுடன், விவசாயிகளின் வருவாயும் குறைகிறது. எனவே, நுாறு நாள் வேலை உறுதித் திட்டத்தை, விவசாய பணிகளுடன் இணைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக இக்கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.எனவே, விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நுாறு நாள் திட்டத்தை விவசாய பணியுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ