சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இளைஞர் சைக்கிள் பயணம்
திருப்பூர்; சுற்றுச்சூழலை காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வரும் மேற்கு வங்க வாலிபரை திருப்பூரில் வரவேற்றனர். மேற்கு வங்கம், லால்கோலா முர்ஷிதாபாத்தை சேர்ந்தவர் பிரசன்ஜித் தாஸ், 26; பி.ஏ., பட்டதாரி. சுற்றுச்சூழல் மற்றும் ரத்தம் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜன., 4ம் தேதி மேற்கு வங்கத்தில் இருந்து சைக்கிள் பயணத்தை துவக்கினார். அங்கிருந்து, ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, புதுச்சேரி, இலங்கை, கேரளா சென்று பின் மீண்டும் கோவை வழியாக திருப்பூருக்கு வந்தார். அவரை திருப்பூர் லயன்ஸ் கிளப் தலைவர் சக்திவேல், செயலாளர்கள் ரகுநாதன், அருண் மற்றும் பொருளாளர் நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். அவருக்கு தங்க இடம், உணவு ஏற்பாடு உள்ளிட்டவை செய்து கொடுத்தனர். 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தனர். --- சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் பிரசன்ஜித் தாஸூக்கு, திருப்பூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. உத்வேகம் அளிக்கிறது உலக சுற்றுப்பயணமாக, 194 நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சைக்கிள் பயணத்தை துவங்கினேன். இதுவரை, 10 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளேன். பசுமையை காக்க, ஆரோக்கியத்துக்கு சைக்கிள் ஓட்டுவீர், அமைதியான சூழலுக்குள் மரங்கள் தேவை, ரத்த தானம் செய்வீர் போன்றவற்றை சந்திக்கும் மக்களிடம் விழிப்புணர்வு செய்கிறேன். செல்லும் ஊர்களில் தன்னார்வ அமைப்பினர் வரவேற்கின்றனர். பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று விழிப்புணர்வு செய்கிறேன். ஒவ்வொரு இடங்களுக்கு செல்லும் போது, புதிய, புதிய மனிதர்களை சந்திக்கிறேன். விழிப்புணர்வோடு சேர்த்து, தனிப்பட்ட விதத்தில் பெரிய மனதைரியம், உத்வேகத்தை கொடுக்கிறது. - பிரசன்ஜித் தாஸ்