உடுமலை: மடத்துக்குளம் வட்டாரத்தில், சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வரும், 30ம் தேதி வரை காப்பீடு செய்து கொள்ள கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதால், பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா கூறியதாவது : அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டாரத்தில், சம்பா பருவத்தில், கடத்துார், கணியூர், சோழமாதேவி, கண்ணாடிபுத்துார், காரத்தொழுவு, துங்காவி, பாப்பான்குளம், குமரலிங்கம் உள்ளிட்ட கிராமங்களில், 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு, நிதி உதவி வழங்கிடவும், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்க செய்யும் வகையில், பயிர்க்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நெல்லுக்கு பயிர்க்காப்பீடு செய்ய, நவ.,15 இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 30ம் தேதி வரை பயிர்க்காப்பீடு செய்து கொள்ள கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள விவசாயிகள், சம்பா பருவ நெற்பயிருக்கு, பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு, ரூ.496.98 செலுத்தி, உடனடியாக பயிர்க்காப்பீடு செய்து கொள்ள வேண்டும். பயிர்க்கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக பதிவு செய்யலாம்.கடன் பெறாத விவசாயிகள் பொது இ - சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், தனிநபர் ஆதார் அட்டை, சிட்டா, நடப்பாண்டு பசலி அடங்கல் மற்றும் வங்கிக்கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங் களுடன் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்யலாம். இவ்வாறு, தெரிவித்தார்.