தெரு நாய்களால் பலியான கால்நடைகளுக்கு இழப்பீடு; விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை; உடுமலை பகுதிகளில், தெரு நாய்கள் கடித்து இறந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயத்துடன் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பும் பிரதானமாக உள்ளது. கடந்த இரு ஆண்டாக, விவசாய தோட்டங்களில் புகும், தெரு நாய்கள் கூட்டம், பட்டிகளில் கட்டி வைக்கப்பட்டுள்ள மற்றும் மேய்ச்சலுக்கு விடப்பட்டுள்ள ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்டவற்றை கடிக்கின்றன; இதில், கால்நடைகள் பல பரிதாபமாக பலியாகி வருகின்றன. இரு ஆண்டுக்கு முன், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், நுாற்றுக்கணக்கான ஆடு, மாடு, கோழிகள், தெரு நாய்கள் கடித்து பலியானது. விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். தெரு நாய்களால் பலியாகும் கால்நடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்ற விவசாயிகளின் தொடர் கோரிக்கை அடிப்படையில், 2024 அக். 24 முதல், 2025 மார்ச் 23 வரையிலான, 6 மாத காலத்தில் தெரு நாய்கள் கடித்து பலியான கால்நடைகளுக்கு, அரசின் சார்பில், 14.97 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அரசு அறிவித்த தேதிக்கு முன்னர், உடுமலை பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் பலியான நிலையில், உடுமலை பகுதி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில், 'உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஆடு, மாடு, கோழி ஆகியவை தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டது. ஒவ்வொரு விவசாயிகளுக்கும், 50 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது. தமிழக அரசு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்து, காங்கயம் உள்ளிட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், உடுமலை பகுதியில் இழப்பீடு வழங்கவில்லை. எனவே, உரிய முறையில் கணக்கீடு செய்து, தெரு நாய்களால் கால்நடைகளை இழந்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.